நான் நினைத்தபடி சிம்பு என்னை படமெடுக்க விடவில்லை: மனம் திறந்த AAA இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்த படம் சிம்புவின் மிக மோசமான படம் என்ற விமர்சனத்தை பெற்றதோடு, தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அமைதியாக இருந்த இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். இருவரும் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியபோது, 'துபாயில் தொடங்கி காசியில் முடியும் வகையில் தான் படம் திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் சிம்பு பல மாற்றங்களை செய்தார். முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்த நான் பெரிய நட்சத்திரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியின்றியே சிம்பு கூறியபடியே படமெடுத்தேன். மேலும் அட்வான்ஸ் பணம் வாங்கும் போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்புவை நடிக்க வைப்பது தனது பொறுப்பு என்று கூறினார். ஆனால் அவரும் எங்களை கைவிட்டுவிட்டார். சிம்பு சரியான ஒத்துழைப்பு தராததால் ஸ்ரேயா, தமன்னா காட்சிகள் திட்டமிட்டபடி படமாக்கப்பட்டவில்லை. இருவரின் கால்ஷீட்டுக்கள் வீணாகியதால் பல லட்சங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டம்'' என்று கூறினார்
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இதுகுறித்து கூறியபோது, 'என் வாழ்வில் மிகப்பெரும் துயரத்தை சிம்பு உருவாக்கிவிட்டார். அட்வான்ஸ் வாங்கியது முதல் மொத்தப் படத்தையும் சிம்புவே தனது கையில் எடுத்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் சிம்பு பல கஷ்டங்களை எனக்கும் இயக்குனருக்கும் கொடுத்தார். 35% படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே படத்தை வெளியிட வேண்டும் என எங்களை வற்புறுத்தினார். என்ன இழப்பு வந்தாலும் அதற்கு நான் பொறுப்பு என சிம்பு கூறினார். அதோடு இரண்டு பாகமாக எடுக்க வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் இரண்டாம் பாகம் நடித்துத் தருகிறேன் என்றவரை இப்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இழப்புகளை சிம்புதான் ஈடுகட்ட வேண்டும். இந்த படத்தால் எங்களுக்கு ரூ.20 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த படம் மட்டுமின்றி சிம்பு நடித்த அனைத்து பட இயக்குனர்களும் கூறும் ஒரு குற்றச்சாட்டு அவர் சரியாக, சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்பதுதான். சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து ஒத்துழைத்தவர்கள் மட்டுமே திரையுலகில் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர். சிம்பு இனிமேலாவது தனது நிலையை திருத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது என்பது கோலிவுட் திரையுலகினர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments