இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்?

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரம் கூறிவருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் அடுத்த பயிற்சியாளர் ஒருவேளை அனில் கும்ப்ளேவாக இருக்கலாம் என்றும் கூறுப்பட்டு வருகிறது. காரணம் கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கும் குறைவாக அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தனது பதவியை விட்டு விலகினார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விவிஎஸ் லக்ஷ்மனுக்கும் இந்த வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

காரணம் அனில் கும்ப்ளே மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உள்ளவர்கள். மேலும் பயிற்சியாளர் பதவிக்கு மிகவும் பொருந்திப் போகக்கூடியவர்கள். இதனால் வெளிநாட்டு கிரிக்கெட் வீரரை பயிற்சியாளராக நியமிப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என்றும் பிசிசிஐ வட்டாரம் கூறிவருகிறது. இதையடுத்து விரைவில் அடுத்த பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.