தக்க சமயத்தில் WHO விற்கு கைக்கொடுக்கும் சீனா!!! கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் நன்கொடை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பணிகளுக்காக, உலக சுகாதார அமைப்பிற்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக சீனா அரசு வழங்க இருக்கிறது. இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹீவா சுனிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகச் சுகாதார அமைப்பானது நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இதில் 194 உலக நாடுகள் உறுப்பு நாடுகளாக செயல்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பானது உலக நாடுகள் வழங்கும் நன்கொடையை அடிப்படையாக வைத்தே பணியாற்றி வருகிறது. மேலும், தன்னார்வலர்கள், உலகப் பணக்காரர்கள் எனப் பலரும் இந்தமைப்புக்கு நிதியை வழங்கி வருகின்றனர். பெருந்தொற்று, நோய் ஒழிப்பு, உலகச் சுகாதாரம், சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாடு போன்ற காரணிகளை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் நேரத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைப்பது மற்றும் அவர்களுக்குள் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற இரட்டிப்பு வேலைகளும் இந்த அமைப்புக்கு உண்டு. மக்களிடையே விழிப்புணர்பு, பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் முதன்மை அமைப்பாகவும் WHO விளங்கிவருகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகச் சுகாதார அமைப்பானது கொரோனா நோய்த்தொற்றை குறித்த தகவலை உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என்றும் சீனாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு WHO மறுப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதால்தான் WHO வின் செயல்பாடுகள் நம்பகத்தன்மைக் கொண்டதாக இல்லை எனவும் அமெரிக்கா WHO க்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். அடுத்ததாக WHO விற்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை நிறுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியிட்டார்.
WHO விற்கு உலகளவில் அதிக நிதியை கொடுக்கும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணங்களால் WHO வின் செயல்பாட்டில் மந்தநிலை தோன்றும் எனப் பலத் தரப்புகளில் இருந்து கவலை தெரிவிக்கப்பட்டது. தற்போது இத்தகைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க உதவும் வகையில் சீனா கூடுதலாக 30 மில்லியன் டாலர்களை WHO வழங்க இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பில் “இந்த நன்கொடை வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா கடந்த மார்ச் மாதத்தில் ஏற்கனவே 20 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments