சர்க்கரைக்கு மாற்றான டேபிள் டாப் இனிப்பு- புற்றுநோயை உண்டாக்கும்- IARS தகவல்!
- IndiaGlitz, [Friday,June 30 2023]
நீரிழிவு நோயாளிகள் பலரும் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக பல ஆண்டுகளாக டேபிள் டாப் எனப்படும் செயற்கை சர்க்கரையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த செயற்கை சர்க்கரை புற்றுநோயை உண்டாக்கலாம் என்று புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் IARS தெரிவித்துள்ளது.
உலகச் சுகாதார அமைப்பு WHO வின் கீழ் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் IARS இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் செயற்கை சர்க்கரையான அஸ்பார்டேம் அல்லது டேபிள் டாப் சர்க்கரை குறித்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அந்த ஆய்வில் செயற்கை சர்க்கரை புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முழுமையான அறிக்கையை இன்னும் IARS வெளியிடாத நிலையில் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிஞர்கள் தெரிவித்து இருப்பது பலரிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் நீரிழிவு நோயாளிகளைத் தவிர இந்த அஸ்பார்டேம் சர்க்கரை சோடாக்கள், சூயிங் கம், இருமல் மருந்துகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் இந்த செயற்கை சர்க்கரையைத்தான் சுவைக்காக இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புற்றுநோய் அபாயம் இருப்பதாகக் கூறப்படும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் காபி மற்றும் தேநீர் அருந்தும்போது வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த அஸ்பார்டேம் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதன் பாதிப்பு தன்மை எப்படி இருக்கும்? அதன் அளவு என்ன? என்பது குறித்து IARS வெளியிடும் விரிவான அறிக்கையில் தெரியவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.