தமிழ் ராக்கர்ஸ் அட்மின் யார்? சட்டசபையில் கேள்வி எழுப்பிய நடிகர்
- IndiaGlitz, [Monday,June 25 2018]
கோலிவுட் திரையுலகின் சிம்மசொப்பனமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் அந்த இணையதளம் புதிய புதிய சர்வர்களின் மூலம் மீண்டும் மீண்டும் முளைத்து கொண்டே இருக்கின்றது.
சினிமாவில் வில்லன் சவால்விடுவது போல் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போது சவால்விட்டு ரிலீஸ் ஆன தினமே இணையத்தில் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட ரஜினியின் 'காலா' வெளியான தினத்தன்று முதல் காட்சி முடியும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் நடிகரும் திமுக எம்.எல்.ஏவுமான சந்திரசேகர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது: யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்? புதிய திரைப்படங்களை ரிலீஸ் ஆன அன்றே இண்டர்நெட்டில் விட்டு விடுகிறார்கள். அந்த இணையதளம் யாருடையது? அதன் உரிமையாளர் யார்?. இந்த தமிழ் ராக்கர்ஸ் சினிமாவில் கூறுவது போல ஆண்ட்டி ஹீரோ ஆகி விட்டது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பேசினார். சந்திரசேகரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழ் ராக்கர்ஸூக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்