சுசித்ராவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

கடந்த ஒரு வாரமாகவே சுசித்ராவின் டுவிட்டர் மேட்டர் இணையதளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சமூக இணையதளங்கள் பரபரப்பாக இருந்தது. பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் அவருடைய டுவிட்டரில் வெளியானதே இந்த பரபரப்புக்கு காரணம்.
உண்மையில் இந்த விஷயம் எதனால் பரவுகிறது என்பதை அனைவரும் வேறொரு கோணத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும். லீக் ஆன விஷயங்கள் உண்மையா? பொய்யா? மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்தும், இதை லீக் செய்தவர் சுசித்ராவா? அல்லது ஹேக்கர்களா? என்பது குறித்தும் சிந்திப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்து பொதுமக்கள் தண்ணீரில் உடமைகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் கடும் கோபம் கொண்டனர். இதற்கான போராட்டம் நடைபெற அனைவரும் ஆயத்தமானபோது திடீரென சிம்பு-அனிருத்தின் பீப் பாடல் விவகாரம், வெள்ள பிரச்சனையை திசை திருப்பியது. அதன்பின்னர் சில நாட்கள் கழித்து மக்களும், ஆட்சியாளர்களும் வெள்ளத்தையும் மறந்துவிட்டனர், பீப் பாடல் சம்பந்தப்பட்டவர்களையும் மறந்துவிட்டனர்.
அதேபோல் சமீபத்தில் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையும் திசை திருப்ப பல சம்பவங்கள் முயற்சித்த போதிலும் இளைஞர்கள் சுதாரிப்பாக இருந்ததாலும், போராட்டத்தில் உறுதியாக இருந்ததாலும் போராட்டத்திற்கு வெற்றியும் பயனும் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் தானாக முன்வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இளைஞர்கள் முழு அளவில் ஈடுபட்டால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றி இதிலும் கிடைத்துவிடும் என்பதால் இளைஞர்களை மட்டும் திசைதிருப்ப, சுசித்ராவின் டுவிட்டர் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. நெடுவாசல் போராட்டம் தோல்வி அடைந்தால் யாருக்கு லாபமோ அவர்கள் சுசித்ராவின் டுவிட்டர் மேட்டரை ஏன் பரப்பி இருக்க கூடாது என்று சாமானியர்களுக்கு சந்தேகம் வருவது இயல்புதானே...
இந்த சந்தேகம் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து யாரும் ஆராய தேவையில்லை. இருப்பினும் இப்போதைய நமது தேவை சுசித்ரா அடுத்து வெளியிடும் வீடியோ என்ன என்பது இல்லை, விவசாயிகளின் போராட்டம் தான் முக்கியம் என்பதை மாணவர்களும், இளைஞர்களும் புரிந்து கொண்டு, திசை திருப்பும் சதிகளில் விழுந்துவிடாமல் ஆக்கபூர்வமான போராட்டத்தை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.