'பாபநாசம் 2' படத்தில் கெளதமிக்கு பதில் இந்த நடிகையா?

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் உருவான இந்த படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடு போட்டதை அடுத்து தெலுங்கில் இந்த படம் தற்போது ரீமேக் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழிலும் ’பாபநாசம் 2’ படத்திற்கான பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ’பாபநாசம் 2’ படத்தில் கௌதமி நடித்த வேடத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி படக்குழுவினர் மனதில் இருந்த நிலையில் தற்போது இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடித்த மீனாவே ’பாபநாசம் 2’ படத்திலும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் மற்றும் கௌதமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இருவரையும் இணைத்து படம் இயக்குவது சாத்தியமில்லை என்பதால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘த்ரிஷ்யம்’ படத்தில் அவரை ரசிகர்கள் மீனாவை பார்த்து உள்ளதால் இந்த படத்திலும் அவரை மிக எளிதாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் இந்த படத்தில் மீனா நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கமலுடன் ’அவ்வை சண்முகி’ படத்தில் மீனா நடித்திருந்தார் என்பதும், அந்த படம் சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.