ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த WHO!!! நடப்பது என்ன???
- IndiaGlitz, [Tuesday,May 26 2020]
கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த மருந்தையும் உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்க வில்லை. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து பற்றிய ஆய்விலும் WHO விரைந்து செயல்பட்டு வருகிறது. அப்படி செய்யப்பட்டு வந்த ஆய்வில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கான சோதனையை தற்போது WHO தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மைக் பாம்பியா மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போன்றோர் இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் உலகம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனை களைக் கட்டியது.
சமீபத்தில் The Lancet அறிவியல் ஆய்விதழில் இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறது என ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு முன்னதாக நடத்தப் பட்ட பல்வேறு சோதனைகளிலும், சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை பயன்படுத்தும்போது குறைந்த இரத்த அழுத்தம், முடக்குவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் WHO வின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் “மலேரியாவிற்கு மட்டுமே இது பாதுகாப்பான மருந்தாக இருக்கிறது. கொரோனா விஷயத்தில் இது பாதுகாப்பான மருந்தாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
மேலும் The Lancet ஆய்விதழில் விஞ்ஞானிகள் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக்காட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான சோதனையையும் அவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். கடந்த வாரத்தில் அமெரிக்காவின் FDA வும் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து பெரிய அளவிற்கு பயனை அளிக்க வில்லை என்றே கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது உலகச் சுகாதார அமைப்பும் எதிர்ப்பார்த்த அளவிற்கு எந்த பயனையும் இந்த மருந்து தரவில்லை என்றும் அதிக அளவில் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்றும் காரணம் காட்டி ஆய்வை நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.