பேராசை பெருநஷ்டம்: விஜயகாந்த் நிலைமைக்கு யார் காரணம்?
- IndiaGlitz, [Friday,June 21 2019]
150 திரைப்படங்கள், அத்தனையும் தமிழில் மட்டுமே என்ற பெருமை விஜயகாந்தை தவிர வேறு எந்த நடிகருக்கும் இல்லை. அதேபோல் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே பல வெற்றிப்படங்களை கொடுத்தவர், அரசியலில் நுழைந்து குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றவர் என பல பெருமைகள் விஜயகாந்துக்கு உண்டு. ஒரு கட்சியும் அதன் சின்னமும் மிக குறுகிய காலத்தில் தமிழகத்தின் குக்கிராமம் வரை பரவியது என்றால் அது விஜயகாந்தின் தேமுதிக கட்சிதான். அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் இருந்த விஜயகாந்தின் இன்றைய நிலைமை அவரது வீடு, கல்லூரி ஆகியவை வங்கியால் ஏலம்விடப்பட உள்ளது. இந்த நிலைக்கு யார் காரணம்?
விஜயகாந்த் உடல்நலத்துடன் இருந்த வரை கட்சி அவரது முழு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் அவரது மனைவி பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் சேர்ந்து கட்சியை செல்லாக்காசாக்கி விட்டனர். கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு எந்த கூட்டணி அதிக சீட்டும் பணமும் தருகிறதோ, அந்த கூட்டணியில் இணைய, கட்சியை சந்தைக்கடையாக்கினர். ஊடகங்களில் திமிர்ப்பேச்சு, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தராதது, மகனை அரசியலில் பெரிய ஆளாக்க பணத்தை தண்ணீராய் செலவு செய்தது ஆகியவைதான் இன்று விஜயகாந்த்தை ஏலம் வரை கொண்டுபோயுள்ளது.
விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கு தங்களுக்கும் இருப்பதுபோல் இவர்கள் இருவரும் நினைத்து கொண்டதுதான் சரிவின் தொடக்கம். விஜயகாந்தின் அனுமதி இல்லாமலேயே இருவரும் எடுத்த பெரும்பாலான முடிவுகள் தோல்வியில் முடிந்தது. இந்த இருவரின் எதேச்சதிகார போக்கால் வெறுத்து போன கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாற்று கட்சிகளில் சரண் அடைந்தனர். இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லாமல், தொண்டர்களும் இல்லாமல் திணறிய தேமுதிக சமீபத்தில் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி தற்போது 'முரசு' சின்னத்தையும் இழக்கும் நிலையில் உள்ளது.
சினிமாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்த வெள்ளேந்திய மனிதரான விஜயகாந்துக்கா இந்த நிலைமை? என ஒவ்வொரு தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்தை சுற்றி இருந்தவர்களின் சுயநலம் மற்றும் பேராசை தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.