எந்த முகக்கவசம் நல்லது- ஆராய்ச்சியில் வெளியான அதிரடி தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
கொரோனா வைரஸ் உலகத்தின் மூலை முடுக்குகளிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முடியாத நிலைமையை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரேவழி, தனிநபர் பாதுகாப்பு, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் போன்ற கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் மட்டுமே நிரந்தர தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழிமுறைகளிலும் பல குளறுபடிகள் தோன்றத்தான் செய்கின்றன.
சானிடைசரைப் பயன்படுத்தத் தெரியாமல் கைகளில் தீப்பிடித்துக் கொள்வது, சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதைத் தெரிந்து கொண்ட மதுப்பிரியர்கள் அதில் தண்ணீரைக் கலந்து குடிப்பது போன்ற ஆபாயமான விஷயங்களிலும் மாட்டிக் கொள்கின்றனர். இந்நிலையில் தனிநபர் பாதுகாப்புக்கு எந்த முகக்கவசம் நல்லது என்ற ஆய்வினை அமெரிக்காவின் டர்ஹாம் பகுதியில் அமைந்துள்ள டியூர் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் சிறந்த மற்றும் ஆபத்தான முகக்கவசங்கள் எது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அந்தவகையில் கொரோனா போன்ற பெருந்தொற்றுக்கு வால்வு இல்லாத N95 மாஸ்க் சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸின் நீர்த்துளிகளை இது முற்றிலுமாக தடைசெய்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். அடுத்ததாக மருத்துவர்கள் பயன்படுத்தும் அறுவைச் சிகிச்சை முகக்கவசங்கள் சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. பாலிபுரொபலின் என்ற வகையைச் சார்ந்த சிறந்த பருத்தித் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முகக்கவசங்களும் கணிசமான அளவில் நீர்த்துளிகளை வடிகட்டிவிடும் எனத் தெரிவித்து இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகளில் இருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் நீர்த்துளிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதேபோல ஒருவர் தும்முவதால் மட்டுமல்ல பேசுகிறபோது கூட கொரோனா வைரஸ் பரவலாம் என்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் காற்றில் கலந்து, காற்றில் இருக்கும் நீர்த்துளிகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப் படுகிறது. இந்த முகக்கவசங்களில் சில வகைகள் மிகுந்த ஆபத்தானவையாகவும் கருதப்படுகின்றன.
டியூக் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் நெக் பிளஸ் வகை முகக்கவசம் மிகவும் ஆபத்தானவை எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தவகை முகக்கவசங்கள் நீர்த்துளிகளை வடிக்கட்டுவதில்லை. மிக எளிதாக நீர்த்துளிகளை மற்றவர்களுக்கு கடத்திவிடுகிறது. இதனால் கொரோனா பாதுகாப்புக்கு இந்த வகை மாஸ்க்குகள் மிகவும் ஆபத்தானவை எனவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக பண்டனாஸ் எனப்படும் பின்னலாடைகளினால் உருவாக்கப்படும் மாஸ்க்குகள் அதிக ஆபத்து கொண்டவை எனக் கூறப்படுகிறது. நீர்த்துளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஈர்க்கும் தன்மைக் கொண்ட முகக்கவசங்களை அணியும்போது அதனால் பயன் விளையாது எனவும் அந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 14 வகை முகக்கவசங்களை கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில் வால்வு இல்லாத முகக்கவசம் மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் அறிவித்துள்ளனர்.