கொரோனா நேரத்தில் எந்த பொருளை வாங்கலாம்??? எதை வாங்கக் கூடாது??? நுகர்வோருக்கு சில ஆலோசனைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கில் தேங்கியிருந்த அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விற்றுத் தீர்த்து விடவேண்டும் என்ற அவசரத்தில் தற்போது வணிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதற்கு மெகா சேல், ஆஃபர்ஸ், வவுச்சர் கூப்பன், முன்பதிவு திட்டம், மின்சாதனப் பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்தல் எனச் சளைக்காமல் பல திட்டங்களை விற்பனை நிறுவனங்கள் வழங்க இருக்கிறது. முக்கியமாக ஆடைகள், காலணிகள், மின்சாதனப் பொருட்கள் போன்ற, கொரோனா நேரத்தில் அவசியமில்லாத பொருட்களுக்குத்தான் இத்தனை சலுகைகளும் கொடுக்கப்பட இருக்கிறது. எனவே நம்மை நோக்கி வீசப்படும் இந்தச் சலுகைகளில் இருந்து எது அத்யாவசியமானது, எது அத்யாவசியம் இல்லாதது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
இது உற்பத்தி உலகம். பொருட்களின் தேவையைப் பொறுத்து உற்பத்தி செய்வதை விட ஒரு பொருளை உற்பத்தி செய்துவிட்டு அந்த பொருளுக்கான தேவையை ஏற்படுத்து வதற்காகவே விளம்பரம் செய்வது, பொது புத்தியில் ஆசையை வளர்த்து விடுவது போன்ற வணிக செயல்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்யும். கொரோனா ஓரளவிற்கு அத்யாவசியம் எது என்ற புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தாலும், முழுமையாக ஊரடங்கு தளர்த்தும்போது விற்பனை நிறுவனங்கள் சலுகைகளைக் காட்டி நமக்கு வலைவீசும் வேலைகளில் ஈடுபடவும் செய்யும். LG, Samsung போன்ற நிறுவனங்கள் இப்போதே பல சலுகைகளை வழங்க ஆரம்பித்து விட்டது.
LG பொருட்களை முன்பதிவு திட்டத்தில் வாங்கும்போது அதிகபடியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. Samsung பொருட்களுக்கு தள்ளுபடியோடு சேர்த்து கேஷ்பேக்குகளும் கிடைக்கும். Samsung Samrt போன்களுக்கு ரூ.6 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல அல்ட்ரா ஹெச்டி ஸ்மார்ட் 4கே டிவி ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்தப் பொருட்களை நேரடியாக வாங்காமல் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கும்போது அதிக தள்ளுபடியை அனுபவிக்க முடியும். அதேபோல நம்மிடம் பணமே இல்லையென்றாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு பொருளை ஆன்லைனில் வாங்கும்போது அந்த கார்டுகளுக்கு என்றே தனிப்பட்ட தள்ளுபடிகள் வழங்கப்படும்.
இந்த தொல்லை போதாது என்று EMI யில் 18 மாதம் வரையிலும் கட்டணம் செலுத்தாத பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுவரை 12 மாதம் கட்டணம் செலுத்தாமல் EMI இல் பொருட்களை வாங்க முடிந்தது. தற்போது அதை 18 மாதமாக வணிகர்கள் நீடித்து சலுகைகளை வழங்க முன்வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வருவதற்கு முன்பே பல ஆடை நிறுவனங்கள் கூப்பன் ஆஃபர்களை ஆன்லைனில் வழங்க ஆரம்பித்து விட்டது. அதன்படி கூப்பன்களை ஆன்லைனில் பதிவு செய்து விட்டு கடை திறந்தவுடன முதல் ஆளாக சென்று பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டியதுதான். Central Shopping நிறுவனம் ரூ. 2999, மற்றும் ரூ.4999 விலையுள்ள கூப்பன்களை இப்போதே ஆன்லைனில் விற்று வருகிறது. இந்தக் கூப்பன்களை வாங்கிக்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள இந்த நிறுவனத்தின் எந்த கடைகளுக்கு சென்றாலும் அங்கு ரூ.4000, மற்றும் ரூ. 7000 மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
கொரோனா நேரத்தில் வேறு வழியே இல்லாமல் மொபைல் போன்களை வைத்துக் கொண்டு அலையும் நாமும் இதுபோன்ற ஆஃபர்களை பார்த்து விட்டு பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்? அது குறித்துத்தான் தற்போது பொருளாதார வல்லுநர்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் சில்லறை வணிகம் முதல் சர்வதேச வணிகம் வரை அனைத்து உற்பத்திப் பொருட்களும் சந்தைப்படுத்தப் படாமல் இருக்கிறது. அந்தப் பொருட்களை விற்க நிறுவனங்கள் இத்தகைய சலுகைகளை வழங்க முன்வருவது இயல்புதான். ஆனால் நடுத்தர மக்களின் கவனம் இப்போதைக்கு எதில் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து பொருளாதார வல்லுநர்கள் பலக் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கினால் கடும் பொருளாதார வீழ்ச்சி நிலையை நாடு சந்தித்து இருக்கிறது. இந்நிலையை சரிப்படுத்தவே குறைந்தது 5 வருடங்கள் ஆகும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பு நாளையோடு நின்று விடும் என்பதற்கு எந்த ஊத்திரவாதமும் இல்லாமல் தொடர்ந்து பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சமூக விலகலை 2020 வரை கடைபிடிக்க வேண்டிவரும் என சில நாட்டு அரசுகள் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நெருக்கடி நிலைமை, இருக்கின்ற வேலையைப் பறித்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத சூழலில் உலகின் பல அரசுகள் திண்டாட வேண்டி இருக்கும்.
பரிந்துரைகள்
இப்படி பலமுனைகளிலும் நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டிருக்கும்போது உணவு, மருத்துவம், சுகாதாரம் போன்ற அத்யாவசியத் தேவைகளைத் தவிர வேறு எந்த பொருள்களுக்கும் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். சலுகைகள், தள்ளுபடிகள் நமக்கு உதவுமே என்ற நோக்கத்தில் பொருள்களை வாங்கலாம் என்ற யோசனையும் ஒருபக்கம் வரத்தான் செய்யும். ஆனால் நாம் இருக்கும் நெருக்கடியில் நமது எதிர்காலத்திற்கோ அல்லது நமது வேலைக்கோ கூட எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே பொருளை வாங்கும் திட்டத்தை விட்டு விட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்பதை குறித்து சிந்திக்க சொல்கிறார்கள் நம் வல்லுநர்கள். மேலும் அத்யாவசியப் பொருட்களில் கூட சிக்கனத்தை கடைபிடிப்பதுதான் நன்மை அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
குறைந்தது 6 மாதத்திற்கு அத்யாவசியப் பொருட்களை வாங்குவதற்குத் தேவையான பணத்தை ஒவ்வொரு குடும்பமும் கையிருப்பு வைத்துக் கொள்வது நலம் எனவும் பரிந்துரை செய்கின்றனர். ஒருவேளை தேவைப்படும் பொருள்கள் மிகவும் அவசியமானது என மனத்திற்கு தோன்றினால் அதை வரிசைப்படுத்தி ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அப்படி எழுதி வைத்தப் பொருளின் விலை எவ்வளவு? எவ்வளவு நாள் அந்தப் பொருள் நமக்குத் தேவைப்படும்? அந்த பொருளின் ஆயுள் என்ன? அதற்கு மாற்று வழி இருக்கிறதா? எனப் பலமுனைகளில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி வரிசைப் படுத்தும்போதே பல பொருட்கள் தற்போதைக்கு அவசியமில்லாதது என்ற முடிவினைக் கொடுத்துவிடும்.
கொரோனா பெருந்தொற்று மோசமான விளைவுகளையும், கடும் பொருளதாரச் சீர்குலைவினையும் கொடுக்கும் ஆபத்தான விஷயம்தான். அதற்காக மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை. எந்த நேரத்திலும் பாதுகாப்பு, கையிருப்பு போன்ற குறைந்த பட்ச எச்சரிக்கையோடு இருந்தாலே இந்த பிரச்சனையை சமாளித்து விடலாம். உடனடி கடன் தேவைக்கு எப்போதும் குறைந்தது 20 சவரன் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என சில பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இந்த யோசனை மிகவும் நல்லது தான். ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கும் இப்போதைய சூழ்நிலைக்கு இது பொருந்தாது என்பதையும் மனதில் வைக்க வேண்டியிருக்கிறது. எந்த துறையிலாவது முதலீட்டை செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தால் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது எனவும் பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com