எது சிறந்த கல்வி முறை? பள்ளிகளில் தேர்வுகள் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? உலக நாடுகளின் கல்வி முறை என்ன சொல்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அளவில் கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. எந்தக் கல்வி முறை சிறந்தது? கல்வி முறையில் என்ன சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்? குழந்தைகளுக்கான தேர்வு முறைகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா? பொதுத் தேர்வு முறைகள் நல்ல பலனைத் தருமா? ஒரு நல்ல கல்வி முறை எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள்விகள் கல்வி துறையில் முக்கியமான விஷயங்களாகும்.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறை அறிவிக்கப் பட்டு தற்போது ரத்து செய்யப் பட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளில் கல்வி முறைகளில் தேர்வு அவசியம் தானா? என்ற கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை பின்பற்றப் படும் என்று அறிவித்த போது கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்தின் கல்வி முறையை பின்பற்றித் தான் இந்த பொதுத் தேர்வு முறைகள் கொண்டு வரப்படுகின்றன எனக் கூறியிருந்தார். உலக நாடுகள் பலவற்றிலும் அவர்களது கல்வி முறையை மாற்றி அமைக்க முற்படும் போது பின்லாந்து கல்வி முறையைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. எனவே கல்வி முறையில் பின்லாந்து என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
அடிப்படையில் கல்வி என்றால் என்ன என்பதே பலருக்கு புரியாமல் இருக்கிறது. ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை விசயங்களைக் கற்றுக் கொள்வதே கல்வி என்பதாகும். ஒருவன் நிம்மதியாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான வசதிகளை கல்வி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உண்மையில் கல்வி என்பது இத்தகைய நிலைமையை ஏற்படுத்தித் தருகிறதா? என்றால் பதில் இல்லை என்பதே.
கல்வி, “அறிவினை பெறுவதற்கான வழிமுறையாக இருக்க வேண்டும்”. அதை விடுத்து பொருளாதாரத்தை பெருக்குவதற்கான ஒரு வழிமுறையாகவோ, அல்லது தொடர்ந்து மனப்பாடம் செய்யும் உக்தியாகவோ அமையக் கூடாது என அனைத்து கல்வியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். குழந்தை பருவத்தில் நடத்தப் படும் தேர்வு முறைகள், மதிப்பீடுகள், பொதுத் தேர்வுகள், சிறப்பு தேர்வுகள் என்று கல்வி துறையில் பல நெருடல்களை பெரும்பாலும் மாணவர்களும் விரும்புவதில்லை. இந்த முறைகளை மாணவர்களின் மூளையை சலவை செய்யவே பயன்படும், சிறந்த அறிவினை இந்தக் கல்வி முறை கொண்டிருக்காது என உளவியல் மருத்துவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கல்வி முறை பதட்டத்தையும், பயத்தையும் தரக் கூடாது. இயல்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்வி உதவி புரிய வேண்டும். எந்த ஒரு மாணவன் புத்துணர்ச்சியாக கல்வியை கற்றுக் கொள்கிறானோ அவனே அறிவாளியாக மாற முடியும். 14 வயதிற்குப் பின்பே ஒரு குழந்தையின் மன நிலை முதிர்ச்சி அடைகிறது என்றும், வாழ்க்கைப் பற்றிய புரிதல், தேவைகள் அப்போதுதான் வருகிறது எனவும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஒரு சிறந்த கல்வி முறை எது என்பதனை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியம்.
பின்லாந்தின் கல்வி முறை
உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் ஒரு கல்வி முறையாக பின்லாந்து கல்வி முறை இருக்கிறது. பல நாடுகளும் தங்களது கல்வி முறைகளை மாற்றி அமைக்க முற்படும் போது பின்லாந்து கல்வி முறையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றன.
அந்நாட்டில் குழந்தை பராமரிப்பு பெரும்பாலும் பெற்றோர்களையே சார்ந்திருக்கிறது. குழந்தைகள் 7 வயது ஆன பின்பு தான் பள்ளிக்கு அனுப்பப் படுகின்றனர். அப்படி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தேர்வுகளோ, மதிப்பெண்களோ, கிரேட்டிட் மதிப்பீடுகளோ இல்லை என்பது தான் இன்னும் முக்கியமான விஷயமாகும்.
தேர்வுகள் இல்லாத பள்ளிக் கல்வியை எப்படி சிறந்த கல்வி என்று சொல்ல முடியும் என்ற கேள்வி எழலாம். பள்ளி கல்வியில் பெரும்பாலும் பயிற்சி முறைகள், செயல் முறைகள் (Practical, Practice) வகையிலேயே பயிற்று விக்கப் படுகிறது. விவசாயம், தையல், தொழில் பயிற்சி, இயந்திர தொழில் நுட்பம், சமையல் முதற்கொண்டு அனைத்து அறிவினையும் பள்ளிக் காலங்களிலேயே மாணவர்கள் பெற்று விடுகின்றனர். வாழ்வதற்குத் தேவையான அடிப்படைகளை பின்லாந்தில் மாணவர்கள் பள்ளியில் தான் கற்றுக் கொள்கின்றனர் என்பது முக்கியமான விஷயமாகும்.
மேலும், அவர்களுக்கு 16 வயது வரை தேர்வுகளே வைக்கப் படுவது இல்லை. ஒரு நாளைக்கு 4 வகுப்புகள் மட்டுமே நடத்தப் படுகின்றன. இந்த 4 வகுப்புகளும் தலா 15 நிமிட இடைவெளி விட்டே நடைபெறுகின்றன என்பதும் முக்கியமானது.
ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 15 நிமிட இடைவெளி இருக்கும்போது தான் நடத்திய பாடங்களை ஆழ்ந்து கிரகித்துக் கொள்ளவும் அடுத்த பாடத்திற்கு தயாராகவும் ஒரு மாணவனால் முடியும் என்று பின்லாந்து கல்வி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் உணவு இடைவேளை மட்டும் 75 நிமிடங்கள் விடப்படுகின்றன. எதற்கு இவ்வளவு நேரம் என்றால் பள்ளி என்பது வெறும் பாடங்களை மட்டும் பயில்வதற்கான இடம் இல்லை என்பதை பின்லாந்து தெரிவிக்கிறது. உணவு இடைவேளையில் மாணவர்கள் மற்றவர்களுடன் கலந்து உரையாடுவதற்கும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்கப் படுகிறது.
பின்லாந்தில் பள்ளி இடைநிற்றல் குறைந்த அளவில் கூட இல்லை என்பது தான் முக்கியமானது. தேர்வுகளே இல்லாத கல்வி முறையில் தரம் குறைந்து காணப்படும் என்ற சந்தேகம் கூட எழலாம். ஆனால் உலக அளவில் மற்ற நாடுகளில் உள்ள மாணவர்களை விட பின்லாந்த் மாணவர்கள் திறமை மிகுந்தவர்களாகவும், தங்களது செயல்களை நேர்த்தியாக செய்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
குழந்தைகளுக்கு பள்ளிகளில் கொடுக்கப் படும் பயிற்சிகள் பெரும்பாலும் குழுவாக சேர்ந்து செய்யும் விதத்தில் தான் கொடுக்கப் படுகின்றன. சிறு வயதில் இருந்தே குழு மனப்பான்மையை வளர்ப்பதற்கு இது உதவுகிறது என்று அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வீட்டுப் பாடங்களை கொடுக்கும்போது அது அரை மணி நேரத்திற்குள் செய்து முடிக்குமாறு உள்ள வற்றையே மட்டுமே ஆசிரியர்கள் கொடுக்கின்றனர் என்பதும் முக்கியமானது. குழந்தைகள் படிப்பதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் அந்நாட்டு கல்வித்துறை கவனமாக இருக்கிறது.
கல்வி முறைகளை விட அந்நாட்டில் கல்வி துறை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் போது தான், அந்நாட்டு கல்வித் தரத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும். தனியார் பள்ளி என்று ஒன்று கூட அந்நாட்டில் இல்லை. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் அரசுக்குச் சொந்தமானவையே ஆகும். எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் தனது குழந்தையை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும். பணக்காரக் குழந்தைக்கும் அடி மட்டத்தில் உள்ள ஏழையின் குழந்தைக்கும் ஒரே வகையான கல்வி தான் வழங்கப்படுகிறது. இதனால் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடுகளை அந்நாடு முழுவதுமாகத் தடுத்து விடுகிறது.
மேலும், ஆசிரியர்கள் மிகவும் மதிப்புடையவர்களாக நடத்தப் படுகின்றனர். மருத்துவர்களை விட ஆசிரியர்கள் தான் அதிகளவு சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர். பள்ளி பருவத்தில் வழங்கப்படுகின்ற கல்வி போதுமானதாக இருக்குமா என்று கேள்விக்கு இந்த அளவு சரியானது தான் என்று ஆசிரியர்கள் பதில் அளிக்கின்றனர்.
7 – 16 வயது வரை செயல்பாட்டு முறையிலான கல்வி எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்படுகிறது. பள்ளி முடியும் தருவாயில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முறை பொது தேர்வு நடத்தப் படுகிறது. பின்னர் Upper secondary school, vocational educational course என்ற இரு கல்வி முறைகள் அந்நாட்டில் வழங்கப் படுகின்றன. இதில் 60% மாணவர்கள் செய்முறை கல்வியையே தேர்ந்தெடுக்கின்றனர். 3 வருடங்கள் இந்த கல்வி பயிலப்படுகிறது. அதற்குப் பின்னர் UG, PG. Ph.D போன்றவை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
குழந்தைகளுக்கு கல்வி பொதுவாக விருப்பமுடையதாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எளிமையாக அவர்களால் படிக்க முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும், அறிவினை வளர்த்துக் கொள்ளவும் இந்த முறை தான் சிறந்தது. தேர்வு மதிப்பெண்களோ, அல்லது மனனம் செய்யும் முறையோ எந்த பலனையும் தராது என்பதில் அந்நாடு மிகவும் தெளிவான முடிவினையே எடுத்து இருக்கிறது என்று பல கல்வியாளர்கள் அவர்களது கல்வி முறையைப் பாராட்டி வருகின்றனர்.
தற்போது நமது நாட்டிலும் சில சமூக ஆர்வலர்கள் இத்தகைய மாற்று கல்வி முறையினைக் கையில் எடுத்திருக்கின்றனர். ஆனால் தேர்வு முறையில் பயின்று வாழ்க்கை நடத்தும் ஒரு சமூகத்தில் இவர்கள் மட்டும் தனியாக இருக்கும் போது வேலை வாய்ப்பினை பெறுவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படவும் செய்கிறது. ஆனால் தேர்வு முறைகளில் பயின்று வரும் மாணவர்களை விட மாற்றுக் கல்வியைப் பயில்பவர்கள் சிறந்த திறனைக் கொண்டிருப்பதாக கல்வி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் என்பது தான் முக்கியமான விஷயமாகும்.
செய்முறை வடிவிலான கல்வியைத் தவிர்த்து, 3 வயதில் இருந்து தேர்வுகள், பொதுத் தேர்வுகள், சிறப்புத் தேர்வுகள், நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் (Extra courses- Abacus) என்ற பெயரில் சிறப்பு வகுப்புகள் இவையெல்லாம் இளம் வயது மாணவர்களை சோர்வில் ஆழ்த்துகின்றன. அதிகளவு சோர்வினை கொடுக்கும் கல்வி முறையில் அதிக அறிவாளிகளை எதிர்ப்பார்க்க இயலாது என்று தற்போது பலத்த குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. இந்தியக் கல்வித் துறை இதைக் கவனத்தில் கொண்டால் சிறந்த அறிவாளி சமூகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைக்க கண்டிப்பாக உதவும் என எதிர்ப்பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments