டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்?
- IndiaGlitz, [Friday,July 09 2021]
கொரோனா நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களைத் தவிர பரிசு பட்டியலில் இடம்பெற துடிக்கும் தடகளவீரர்கள் பலர் இந்தப் போட்டியை எதிர்ப்பார்த்து வருடக்கணக்கில் பயிற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை எதிர்ப்பார்த்து 26 இந்திய வீரர், வீராங்கனைகள் ஜப்பானுக்கு படையெடுக்க உள்ளனர்.
மல்யுத்தம்
இந்தப் பட்டியலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத்தும் இடம்பிடித்து இருக்கிறார். அவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகள் என இரண்டிலும் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்பதோடு சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு 13 பதக்கம் வென்றுள்ளார். அதில் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலமும் அடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“தங்கல்“ திரைப்பட கதைக்கு காரணமான மகாவீர் சிங் போகாத் இவருடைய பெரியப்பா என்பதும் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய கனவோடு மல்யுத்த வீராங்கனையாக அவதாரம் எடுத்து இருக்கும் வினேஷ் போகாத் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை தனது லட்சியமாகவே கருதி வருகிறார். அவர் ரியோ ஒலிம்பிக்கில் தவறவிட்டதை தற்போது டோக்கியோவில் 53 கிலோ எடைப் பிரிவில் பெற்றுவிட வேண்டும் என துடித்து கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சுடுதல்
துப்பாக்கி சுடும் போட்டியில் பல பதக்கங்களை வென்று இந்தியாவின் நம்பிக்கை நட்சதிரமாக உருவாகி இருக்கும் ராஹி சர்னோபாத் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 25மீ பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.
கூடவே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் மேலும் துப்பாக்கி சுடும் போட்டியில் உலகக்கோப்பை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார்.
அதோடு கடந்த 2019 ஜெர்மனியில் மியூனிக் உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்று துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு பல பெருமைகளை பெற்று தந்தவர். தற்போத டோக்கியோ போட்டியில் பதக்க பட்டியலில் இடம்பெற வேண்டும் என துடித்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈட்டி எறிதல்
ஈட்டி எறிதல் போட்டியில் உலகச் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஹரியாணாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா. இவர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48மீ தூரம் ஈட்டி எறிந்து ஜுனியர் அளவில் சாதனை படைத்தவர். கூடவே கடந்த 2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவர். மேலும் ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் என பல நிலைகளில் முன்னிலை பெற்ற இவர் தற்போது டோக்கியோவில் கலக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் களம் இறங்க உள்ளார்.
தமிழக வீரர்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகள் ஒரே நேரத்தில் தொடர் ஓட்டப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறது. 5 பேர் கொண்ட தமிழகப் பட்டியலில் 3 பெண்கள் இடம்பிடித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் தனலட்சுமி, சுபா, தேவதி ஆகிய 3 வீராங்கனைகளும் 4×400மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் தேர்வாகி உள்ளனர். மேலும் ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் ஆகிய 2 வீரர்களும் 4×400மீ தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இவர்களின் பின்னணி விளையாட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது. அதிலும் திருச்சி அடுத்த திருவெம்பூரைச் சேர்ந்த சுபா(21) ஒரு கட்டிடத் தொழிலாளியின் மகள் என்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்து ரேவதி தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தவர் என்பதும் தாய், தந்தையை இழந்து பலமுறை வெறும் காலில் ஓடி பதக்கங்களை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அடுத்து தேசிய சீனியர் தடகள போட்டியில் பங்கேற்று தனது முதல் போட்டியிலேயே 100மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர் தனலட்சுமி. இவர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரபல வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரியும் நாகநாதன் தொடர் முயற்சிக்குப் பின் தற்போது முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்று இருக்கிறார். அடுத்து ராணுவத்தில் பணியாற்றி வந்த ஆரோக்ய ராஜீவ் ஏற்கனவே ஆசிய விளையாட்டில் 3 முறை பதக்கம் வென்று தற்போது 2 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் களம் காணுகிறார். இவர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களைப் பெற்று தடகள விளையாட்டுகளை மென்மேலும் ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதே தற்போது பல ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.