ஷங்கர் மகளுக்கு முதல்வர் கொடுத்த திருமண பரிசு என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Monday,June 28 2021]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்தது. இந்த திருமணத்தில் கோவிட் தொற்று காரணமாக மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்திய முதல்வர், அவர்களுக்கு பசுமைக்கூடை ஒன்றை பரிசாக அளித்தார். அதில் மரக்கன்றுகள் இருந்தது என்பதும் அந்த பசுமைக்கூடையில் நாம் மரம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மரக்கன்றுகளை ஷங்கர் தனது வீட்டில் முதல்வரின் நினைவாக நட்டு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திருமணம் நடைபெற்று முடிந்ததும் முதல்வர் ஸ்டாலினுக்கு கும்பகோணம் பில்டர் காபி கொடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் ருசித்து குடித்ததாகவும் தகவல்கள் எழுந்துள்ளன. தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் கலந்துகொள்ளும் முதல் திரையுலகினர் சார்ந்த நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது