தேர்தல் 2019: கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது?

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய ஒரு வருடத்தில் முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளை எந்தவித கூட்டணியும் இல்லாமல் தனியாக எதிர்த்து களம் காணும் கமல்ஹாசனுக்கு முதல்முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவில் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று வரும் கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவலின்படி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி இருக்கும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒருசிலர் அவர் ஆழ்வார்ப்பேட்டையை உள்ளடக்கிய தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். வரும் 21ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியும் தெரிந்துவிடும் என்பதால் அதுவரை பொறுமை காப்போம்.