ஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் நடக்க இருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்தப் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 51 நாட்கள் நடக்க இருப்பதாக பிசிசிஐ யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் போட்டிகள் நடைபெறாது எனத் தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி தெரிவித்து இருக்கிறது. டி20 உலகக் கோப்பை ரத்து செய்யப் பட்டுள்ளதால் ஐபில் 2020 உறுதியாக நடக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் போட்டிகளை நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக வேறு நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என ஆலோசிக்கப் பட்டபோது இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் விருப்பம் தெரிவித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுவதால் தற்போது பிசிசிஐ போட்டிகளை அங்கேயே நடத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதி அட்டவணை தயாரிக்கும் பணிக்காக பிசிசிஐ யின் ஆட்சிக்குழு அடுத்த வாரம் கூடவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கொரோனா பரவல் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற பல இடங்களில் இந்தப் போட்டிகளில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout