கொரோனா வைரஸ் எங்கிருந்து, எப்படி பரவியது??? சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வுமுடிவு!!!
- IndiaGlitz, [Saturday,March 21 2020]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா Covid-19 (novel), அறிவியல் குறியீட்டில் SARS-CoV-2 வைரஸ் பரவலுக்கு இதுவரை காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் உலகின் இருபெரிய வல்லரசுகள் தங்களுக்குள் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றன. ஒருபக்கம் இறைச்சி உணவு முறைகளால் இந்த வைரஸ் உற்பத்தியாகி உலகைத் தாக்கி வருகிறது என்ற வதந்திகளும் பரவி வருகின்றன.
Bio War??? மருத்துவ வியாபாரத்திற்காக நடத்தப்பட்டவை??? இப்படி பல சந்தேகங்களுக்கு Scripps Research Institute நடத்திய ஒரு ஆய்வு முடிவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் SARS-CoV-2 வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல. இயற்கையாக பரிணமித்தவை எனத் தெரிய வந்திருக்கிறது.
Scripps Research Scientists கோவிட்-19 (SARS-CoV-2) வைரஸ் தொற்றை பல கோணங்களில் இருந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது? மனித உடலை எப்படி பாதிக்கிறது? போன்ற முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
SARS-CoV-2 பற்றி பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. இதற்கு உறுதுணையாக சீனா SARS-CoV-2 வைரஸின் மரபணு தொடர் வரிசையை ஆய்வு செய்து, நோய்தொற்று பரவிய சில நாட்களிலேயே வெளியிட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. சீனா பொதுவெளியில் வெளியிட்ட மரபணு தொடர்வரிசையை அடிப்படையாகக் கொண்டு தற்போது பல நாடுகளும் தடுப்பூசி குறித்த ஆய்வுகளையும் நடத்தி வருகின்றன.
நோய்தொற்று பரவிய முதல் வாரத்திலேயே இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தினர். இதற்கு காரணம் SARS-CoV-2 வைரஸ் கூர்மையான பந்துமுனை போன்ற புரதப்பொருட்களைத் தன்னுடன் வைத்திருக்கிறது. இந்த கூர்மையான பந்துமுனை புரதவடிவிலான சாவியை வைத்துக்கொண்டுதான் விலங்கு மற்றும் மனிதர்களின் செல்லுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.
மனிதன் மற்றும் விலங்குகளின் செல்களில் உள்ள ACE2 என்ற புரதத்தைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் SARS-CoV-2 வைரஸ் அமைந்து இருப்பதை முதலில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மனிதச் செல்லுக்குள் இருக்கும் புரதச்சாவியை (அதாவது ACE2 ஐ), SARS-CoV-2 என்ற கள்ளச்சாவிக்கொண்டு திறக்கும் ஆற்றல் கொரோனா வைரஸ்க்கு இருக்கிறது.
செயற்கையாக உருவாக்கப் பட்டவையா???
புதிய SARS-CoV-2 வைரஸை மற்ற கொரோனா குடும்ப வைரஸ்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வை ஆய்வாளர்கள் தொடங்கினர். அப்போது தான் மற்ற SARS-CoV வைரஸ்களில் இருக்கும் புரதத்தைவிட புதிய SARS-CoV-2 வைரஸ் புரதம் ஆற்றல் குறைந்தவையாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. செய்கையாக ஒரு புதிய வைரஸை உருவாக்க நினைத்தால் ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை விட ஆற்றல் அதிகமாக இருக்குமாறு உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும். ஆனால் SARS-CoV-2 கொடிய வைரஸாக இல்லாமல் வவ்வால்களை தாக்கும் SARS-CoV வைரஸ் போன்றே இருக்கிறது. இந்த வைரஸ் எறும்புத்திண்ணி Ant- eater களில் இருக்கும் வைரஸ் போன்றே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், வவ்வால்களிடம் இருந்து நோய் பரப்பும் SARS-CoV வைரஸின் சாயலும் இந்தப் புதிய கொரோனா வைரஸிடம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மற்ற கொரோனா குடும்பத்து வைரஸ்க்கு இருக்கும் ஆற்றல் கூட புதிய கொரோனா SARS-CoV-2 வைரஸ்க்கு இல்லை. SARS-CoV-2 வைரஸின் கூர்முனையில் இருக்கும் RBD புரதத்தை ஆய்வுக்குட்படுத்தி பார்த்த Scripps Research Institute ஆய்வாளர்கள் இது செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டவை இல்லை என்பதைத் தற்போது தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
அடிப்படை காரணம்
இந்தப் புதிய வகை கொரோனா கோவிட்-19 நாவல் (SARS-CoV-2) வைரஸ் எப்படி பரவி இருக்க முடியும் என்பதைக் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்தப் புதிய வகை வைரஸ் இரண்டு முறைகளில் பரவி இருக்கலாம். ஒன்று விலங்குகளிடம் இருந்து நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள் உருவாகி மனிதர்களிடம் பரவி இருக்கலாம். இரண்டு, முதலில் நோய் ஏற்படுத்தும் தன்மை இல்லாமல் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்களில் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளாக வளர்ச்சி அடைந்து இருக்கலாம். ஆனால் எது இறுதியானது என்பதை இறுதிசெய்ய முடியவில்லை.
அடுத்து, வவ்வால்களிடம் தொற்று ஏற்படுத்தும் தன்மை உடையதாக இருப்பதால் வவ்வால்களிடம் இருந்து பரவி இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் நேரடியாக விலங்குகளுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமி மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. MERS, SARS வகை வைரஸ்கள் பரவியபோது முதலில் புனுகு பூனையில் இருந்து வைரஸ் தொற்று உருவாகி பின்னர், ஒட்டகங்களுக்கு அவை பரவி பரிணாமம் பெற்று அடுத்துத்தான் மனிதர்களுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தின. எனவே இது விலங்குகளிடம் இருந்து நேரடியாக பரவி இருக்கவும் வாய்ப்பில்லை.
நோய் விளைவிக்கிற திறனற்ற வைரஸ்கள் மனிதன் மற்றும் விலங்குகளுக்குப் பரவி பின்னர் நோய் ஏற்படுத்தும் அளவிற்கு பரிணாமம் பெற்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எறும்புத்திண்ணிகளிடம் இருக்கும் புரதமும் கொரோனா வைரஸ் RBD புரதமும் ஒரே தன்மையுடையவையாகவும் இருக்கின்றன. எனவே ஏதாவது ஒரு வகையில் விலங்குகளிடம் உள்ள வைரஸ்கள் மனிதனுக்கு முதலில் பரவியிருக்கும். அவை நோய் தொற்று ஏற்படுத்தும் தன்மையுடையவையாக முதலில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பின்னால் நோய் தொற்று ஏற்படுத்தும் வைரஸ்களாக அவை வளர்ந்திருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வவ்வால், எறும்புத்திண்ணி என எந்த விலங்கினத்தின் வைரஸ் இதுஎனவும் ஆய்வில் இறுதி செய்யப் படவில்லை. ஆனால் விலங்குகளுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ் மனிதனின் உடலில் நேரடியாகப் பரவி நோய் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை. இது மனிதனின் உடலுக்குள் பரவி நோய் ஏற்படுத்தும் வகையிலான வளர்ச்சி மாற்றங்களை பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று சந்தேகம் அடைந்திருக்கின்றனர். எனினும் முழுமையாக ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட வில்லை. எப்படி பரவியிருக்கும் என்பதற்கான தெளிவான விடயங்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுகொள்ள முடிகிறது.
நன்ற-Press@Scripps.edu