கொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து நேற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 மக்கள் நலத் திட்டப்பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்து இட்டார்.

அதில் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக, முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்பதும் அடங்கி இருந்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வரும் மே 10 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் 4,153.39 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் உள்ள 2,07,67,000 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. அதோடு இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் வரும் மே 10 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.சக்கரபாணி குறிப்பிட்டு உள்ளார்.

அதோடு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அதிகாரிகளே நேரடியாக வந்து டோக்கன் வழங்குவார்கள் என்றும் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் என்ற வீதத்தில் ரேஷன் கடைகள் வழியாக பணம் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.