குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1,000 வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ரூ.1,000 வழங்கும் ஆணையில் கையெழுத்து இடுவார் என எதிர்ப்பார்க்கப் பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளின்  அதிகரிப்பால் ஆக்சிஜன், படுக்கை, ரெம்டெசிவிர் போன்ற அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு நிதிச் சுமையும் கூடியிருக்கிறது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 வழங்கும் ஆவணத்தில் கையெழுத்து இட்டார். அதன் முதல் தவணை ரூ.2,000 இந்த மாதமே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் ஆவின் பால் விலை குறைப்பு, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் கோப்பு இடம்பெற வில்லை. தற்போது வரும் ஜுன் 3 ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் வருகிறது. இந்தத் தினத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்ற பேச்சு தற்போது கோட்டை வட்டாரத்தில் உலவுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.