கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்??? அமெரிக்கா, சீனா இடையே நிலவும் கடும் போட்டி!!!
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பல வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனா சிகிச்சைக்கு முறையான மருந்துகள் இல்லாமல், பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் கொரோனா ஊரடங்கினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதை உலக நாடுகள் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் அனைத்துக்கும் இறுதிக் கட்ட முடிவாக கொரோனா தடுப்பு மருந்தை மட்டுமே மக்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இதுவரை WHO வின் தரவுப்படி உலக நாடுகளில் 120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதில் ஜுன் மாதம் வரை சுமார் 10 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்களின் மீதும் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில்தான் முதன் முதலில் கொரோனா தடுப்பூசி மனிதர்களின் மீது பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகள் மனிதர்களின் மீது சோதித்து வருகின்றன. தற்போது சீனாவில் நடத்தப்படடு வரும் பல கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் 5 மருந்துகள் இறுதி முடிவை எட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதன் பலன் முழுமையானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நேற்று, சீன அதிபர் ஜி ஜிங்பிங் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டவுடன் உலகளாவிய பொது நன்மைக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசிகளில் ஐந்து வகையான தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்த அறிக்கையை சீனாவின் வைரஸ் நோய்த்தொற்று நோயியல் நிபுணர் மற்றும் சிறந்த சுவாச நோய் நிபுணருமான டாக்டர் ஜாங் நன்ஷான் வெளியிட்டு உள்ளார். வெள்ளை காகித (அ) செயல்படாத தடுப்பூசிகள், இனக்கலப்பு புரதம் தடுப்பூசிகள், வலுக் குறைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தடுப்பூசிகள், ஆடனோ வைரஸான திசையன் தடுப்பூசிகள் மற்றும் நியூக்ளிக் அமிலம் தடுப்பூசிகள் என அவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.
கொரோனாவின் மரபணு மாற்றங்கள் மற்றும் வகை மாற்றங்களுக்கு உகந்தவாறு பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த தடுப்பூசிகளில் இறுதி முடிவை எட்டும்போது உறுதியாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தடுப்பூசியைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் அந்தோணி பௌசி, அமெரிக்கா இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை சந்தைக்குக் கொண்டுவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா பரவல் விவகாரத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடும் மனக்கசப்பு இருந்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி விஷயத்திலும் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.