15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி… பதிவு செய்வது எப்படி?
- IndiaGlitz, [Monday,December 27 2021]
இந்தியாவின் கொரோனாவின் 2 ஆவது அலை பாதிப்பே இன்னும் முடிவிற்கு வரவில்லை. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்கள் ஒமைக்ரான் பாதிப்பைத் தடுக்க தற்போது இரவுநேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் 15-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரி முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த கொரோனா தடுப்பூசியை ஒவ்வொருவரும் CoWin செயலியைப் பயன்படுத்திச் செலுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பேசிய கொரோனா தடுப்பூசி செயல்திட்டத்தின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா CoWin செயலியில் பதிவுசெய்து 15-18 வயதினர் தங்களது கொரோனா டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் CoWin செயலில் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி அனைத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் உள்ள ப்ளேஸ்டோரின் இந்த CoWin செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 15-18 வயதினர் ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை போன்றவற்றை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். இதில் 10 ஆம் வகுப்பு சான்றிதழை அடையாள அட்டடையாகப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இதைத்தவிர இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.