டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன்னர் தினகரனிடம் நான்காவது நாளாக இன்றும் விசாரணை தொடங்கியது.

இதனிடையே கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நடந்த உரையாடலின் தொலைபேசி ஆதாரங்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது தினகரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரனுக்கு எதிரான தங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த ஆதாரங்களை வைத்தே அவரை கைது செய்ய தங்களால் முடியும் என்றும் இருப்பினும் கூடுதல் ஆதாரங்களை சேரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் டிடிவி தினகரன் வெகுவிரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.