பாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு காட்சியில் புல்வெளிக்கு அருகே ஒரு சிறு நாய் குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென அந்த நாய் குட்டியின் கழுத்தை ஒரு மலைப்பாம்பு இறுகப் பிடித்துக் கொள்கிறது. இதைப் பார்த்த சிறுமி முதலில் ஒரு தெர்மாகோல் ஷீட் போன்ற ஏதோ ஒரு பொருளை வைத்து அடிக்கிறார். அருகில் அந்த சிறுமியின் தங்கையும் பயந்து போய் பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஆனாலும் அந்த பாம்பு நாய் குட்டியை விட்டப்பாடில்லை.

இதனால் வேறு வழியில்லை என்று நினைத்த அந்தச் சிறுமி துளியும் யோசிக்காமல் நாயின் கழுத்தைப் பிடித்து இருந்த அந்த மலைப்பாம்பை தனது கையால் பிடித்து இழுக்கிறார். அப்போதும் அந்த பாம்பு அசையாமல் நாயைப் பிடித்துக் கொள்கிறது. இதனால் இப்படியும் அப்படியுமாக அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து சுழற்றுகிறார். அந்த சிறுமி சுழற்றிய சுழற்றில் அந்த பாம்பிற்கே தலைச்சுற்றி இருக்கும்போல, கடைசியில் ஒருவழியாகத் தனது பிடியை விட்டுவிட்டது. இதனால் பாம்பின் பிடியில் மாட்டிய நாய்க்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.

தன்னுடைய செல்லப் பிராணியை காப்பாற்ற வேண்டும் என நினைத்த சிறுமி துளியும் பயப்படாமல் பாம்பை பிடித்து விளாசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. இதனால் அச்சிறுமிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் நடந்ததாக அந்தப் பதிவில் கூறப்பட்டு உள்ளது. மேலும் பாதிப்புக்கு ஆளான அந்த நாய் குட்டிக்கு வயது 9 வாரங்கள் என்றும் அதன் பெயர் ஜாஸ்பர் என்றும் கூறப்பட்டு உள்ளது.