கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது எப்போது? பிரேமலதா தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை என்பது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு எப்போது பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை அவரது மனைவியும் தேமுதிக செயலாளருமான பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறிய போது ’டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து எங்களுக்கு வந்த தகவல்படி கேப்டன் விஜயகாந்த்துக்கு வரும் மே 9ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

இதனை அடுத்து நானும் எனது மகன் விஜய பிரபாகரனும் டெல்லிக்கு மே 8ஆம் தேதி செல்கிறோம். மே 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜயகாந்த் பத்ம பூஷன் விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், 9ஆம் தேதி வழங்கப்படவுள்ளதால் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.