கமல் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாவது எப்போது?
- IndiaGlitz, [Monday,January 29 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் ராமநாதபுரத்தில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் கமல், அதன் பின்னர் மதுரை, திண்டுக்கல், சிவகெங்கை மாவட்டங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்திக்கின்றார். 'நாளை நமதே' என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த அரசியல் பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை நமதே பயணத்தை முடித்த பிறகு கமல் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் பட்டியலை கமல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கட்சியில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என மூத்த நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை செய்து வருவதாகவும், ஏற்கனவே முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை கமலிடம் நற்பணி இயக்க பொறுப்பாளர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பகுத்தறிவு அரசியல் பாதையில் செல்லும் கமல்ஹாசனின் கட்சி, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமா? மக்களின் நன்மதிப்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!