நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை எப்போது??? தொடரும் இழுபறி...
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. முகேஷ் சிங் (32), அக்சய் குமார் சிங் (33), வினய் சர்மா (26), பவன் குப்தா (25) ஆகிய நான்கு பேருக்கும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட இருந்தது.
ஜனவரி 22 ஆம் தேதியே தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை துறை நிர்வாகம் கவனித்து வந்தது. ஆனால் வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை கோரி ஒரு மனுவை நீதிமன்றத்தில் அளித்து இருந்தார்.
அந்த மனுவில், தனது கருணை மனு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது, அதன் முடிவு தெரியாமல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படக் கூடாது எனக் கோரி இருந்தார். தடை வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்டனையை தள்ளிப் போடும் படி வலியுறுத்திய நிலையில் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே டெல்லியின் துணை நிலை ஆளுநரும், குடியரசு தலைவரும் முகேஷ் சிங்கின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே முகேஷ் சிங்கின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஆனால் ஒரு மனு தள்ளுபடி செய்யப் பட்டு 7 நாட்கள் கழித்த பின்பே தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்ற விதியின் படி தண்டனையை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், குற்றவாளிகளுக்குத் தனித் தனியாக தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இதனால் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குற்றவாளிகள் தங்களுக்கான சட்ட வாய்ப்புகளை இந்த 7 நாட்களுக்கு உள்ளாகவே பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். எனவே அக்சய் குமார் சிங் தனது தண்டனையை குறைத்து உத்தரவிடுமாறு குடியரசு தலைவரிடம் மனுவை அளித்திருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை குடியரசு தலைவர் ஒப்புக் கொள்ளாமல் நிராகரித்து விட்டார்.
எவ்விதச் சட்டச் சிக்கலும் இல்லாமல் பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என அனைவரும் எதிர்ப் பார்த்திருந்த நிலையில் வழக்கின் இன்னொரு குற்றவாளியான வினய் சர்மா தனது கருணை மனுவை காரணம் காட்டி மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்றார். இதனால் பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இரண்டு முறை தண்டனை தேதி அறிவிக்கப் பட்டும் தண்டனை நிறைவேற்றப் படாததால் நிர்பயா குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். திகார் சிறை துறை நிர்வாகமும் நிர்பயா குடும்பத்தினரும் தண்டனை தேதியை அறிவிக்குமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தை அணுகினர். எனவே மார்ச் 3 ஆம் தேதி நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்சய் குமார் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா மூன்று பேரும் தங்களது சட்ட வாய்ப்புகளை இழந்துவிட்ட நிலையில் மீதியுள்ள பவன் குப்தா கடந்த வாரம் தனது பங்குக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தினார். தனது தண்டனையின் அளவை குறைக்குமாறும் ஒரு சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் சமர்பித்தார். மேலும், குடியரசு தலைவருக்கு தனது கருணை மனுவை அனுப்பி வைத்தார்.
சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இப்போது கடைசி ஆயுதாக கருணை மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தூக்குத் தண்டனைக்கு தடை கோரலாம் என எதிர்ப் பார்த்திருந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் பவன் குப்தாவின் தண்டனை குறைப்பு மனு, தூக்குத் தண்டனை தடை மனு என அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு மனு தள்ளுபடி செய்து 7 நாட்களுக்குப் பின்னரே தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்பது சட்ட விதியாக இருக்கும்போது மார்ச் 3 ஆம் தேதியான நாளை 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தண்டனையை தள்ளிப் போடுவதற்காகவே இத்தனை மனுக்களை குற்றவாளிகள் அளித்து சிக்கலை ஏற்படுத்தினர் என நிர்பயா தரப்பு மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் குற்றச் சாட்டம் எழுப்பப் பட்டது. இரண்டு முறை தண்டனை தேதி அறிவிக்கப் பட்டு தண்டனை நிறைவேற்றப் படாமல் மார்ச் 3 ஆம் தேதிக்கு தண்டனை மாற்றப் பட்டது. மூன்றாவது முறையாக அறிவிக்கப் பட்ட மார்ச் 3 ஆம் தேதியான நாளை, தண்டனை நிறைவேற்றப் படுமா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout