டாஸ்மாக் கடைகளுக்கு இடம் வாடகைக்கு கொடுத்தால்? வாட்ஸ் அப்-இல் பரவி வரும் ஒரு வினோத எச்சரிக்கை
- IndiaGlitz, [Saturday,April 08 2017]
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அருகில் இருந்த சுமார் 3000க்கும் அதிகமான கடைகள் இழுத்து மூடப்பட்டது. இந்த கடைகளை வேறு இடத்தில் மாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் 500 மீட்டருக்கு அப்பால் வாடகைக்கு இடம் பிடிக்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுபானக் கடைகள் வைக்க இடம் கொடுப்பவர்களை எச்சரிக்கும் விதமாக அரியலூர் பகுதியில் வாட்ஸ்-அப் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அரியலூர் மாவட்டத்தில் சாராய கடைக்கு வாடகைக்கு இடம் கொடுப்பவா்கள் கவனத்திற்கு...
தினமும் கடை முன் விழுந்து கிடப்பவர்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி உங்கள் விட்டு வாசலில் படுக்க வைப்போம்.
உங்கள் கடையில் கடைசியாக சரக்கு அடித்து சாகும் நபரின் சடலத்தை உங்கள் வீட்டு வாசலில் வைத்த பிறகு தான் அடக்கம் செய்யப்படும்.
உங்கள் கடையில் சரக்கு அடித்து குடும்பத்தை தெருவில் விட்டால் அவர்கள் குடும்பத்தை கூட்டி வந்து மண் அள்ளி உங்கள் குடும்பம் நாசமாக போக சாபம் விடப்படும்.
குடிகாரான் மனைவி மற்றும் பிள்ளைகள் குடியின் கொடுமை தாங்காமல் குடும்பம் பிரிந்தால் உன் குடும்பமும் அதே கதிக்கு தான் ஆளாகும்.
இதை படித்துவிட்டு போங்கடா என்று பணம் தான் முக்கியம் என்று மதுப்பானக் கடைக்கு இடம் கொடுத்தால், ஒரு லோடு மனித கழிவை எங்கள் சொந்த செலவில் உன் வீட்டு வாசலில் கொட்டுவோம்.
இப்படிக்கு அரியலூர் மாவட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை படித்த பின்னர் எந்த உரிமையாளராவது டாஸ்மாக் கடைகளுக்கு இடம் வாடகைக்கு தருவார்களா? இதேபோன்ற எச்சரிக்கை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவினால் இந்த 3000 டாஸ்மாக் கடைகளை முற்றிலும் ஒழித்துவிட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களே இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்