வாட்ஸ் அப்-இல் வரும் போட்டோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்: புதிய வசதி அறிமுகம்!
- IndiaGlitz, [Wednesday,August 04 2021]
வாட்ஸ் அப்பில் வரும் புகைப்படங்களை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கும் வசதி புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமூகவலைதளங்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்அப் செயலில் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாம் எத்தனை முறை வேணாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதும் நமக்குத் தேவை இல்லை என்றால் டெலிட் செய்யப்படும் வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே.
ஆனால் தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒரே ஒருமுறை மட்டும் பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ’வியூ ஒன்ஸ்’ என்ற இந்த புதிய வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெறுபவர்கள் அந்த புகைப்படம், வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு முறை புகைப்படத்தை ஓபன் செய்து விட்டு வெளியே வந்து விட்டால் அந்த புகைப்படம் தானாக மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வசதியின் மூலம் அனுப்பப்படும் புகைப்படத்தை செல்போனில் சேவ் செய்ய முடியாது என்பதும் மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டோரியில் 24 மணி நேரம் மட்டுமே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருக்கும் வசதி உள்ள நிலையில் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.