இந்த இரண்டை மட்டும் என்னால் மறக்க முடியாது: மலரும் நினைவுகளில் வெங்கட்பிரபு
- IndiaGlitz, [Monday,April 27 2020]
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 600028 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை இதுகுறித்து வெங்கட்பிரபு பதிவு செய்த ஒரு டுவீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தை பாராட்டி இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஆகியோர் எழுதிய கடிதங்களை பதிவு செய்து இதைவிட ஒரு இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் ‘சென்னை 600028’ குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புள்ள வெங்கட் பிரபு அவர்களுக்கு, முதற்கண் எனது இதயபூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களது ’சென்னை-28’ படத்திற்கு. லகான் தங்களுக்கு ஒரு ஆரம்பபுள்ளி வைத்திருக்கிறது என்றாலும் எத்தனை தமிழ் சினிமா பிரபலங்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது நான் உள்பட
உங்களால் தான் அது முடிந்திருக்கிறது. அந்த வயது பிள்ளைகள் இப்படித்தான் அதிரடி அட்டகாசங்களை செய்வார்கள். தண்ணி அடிப்பார்கள். லவ் பண்ணுவார்கள். அந்த லவ் ராவ்வாகத்தான் இருக்கும். சினிமாத்தனமான எதுகை மோனையோடு டூயட் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்னும் இன்ன பிற விஷயங்களில் உங்களது நேர்மையான பார்வை என்னை மிக மிக கவர்ந்தது
சலிப்போ அலுப்போ இல்லாத ஒரு குறையுமின்றி கதை அமைப்பும் வசனங்களும் அந்த வயது விடலை போலவே துள்ளி திரியும் கேமராக் கோணங்களும் பார்த்தபோது தேர்ச்சி பெற்ற ஒரு செல்லுலாய்டு மாணவனின் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு திரைப்படம் போல் எனக்கு தோன்றியதில் வியப்பில்லை
யுவனின் இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது. உங்களுடன் ஒத்துழைத்த சகோதர நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். எஸ்பி சரணுக்கு இனி ஒரு மகுடம். மிகப் பெரிய எதிர்காலம் தங்களை நோக்கி காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை’ என்று கே பாலசந்தர் தெரிவித்துள்ளார்
அதேபோல் பாரதிராஜா அவர்கள் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா என்றுமே புதிய தலைமுறைகளால்தான் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. பிரபு, பிரேம், யுவன், சரண் போன்ற இளைஞர்களால் அது தற்போது மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. சென்னை 600028 அதை உறுதி செய்திருக்கிறது. இந்திப மக்களின் தேசிப உணர்வாய் ஆகிவிட்ட கிரிக்கெட் எனும் விளையாட்டினூடே சென்னை நகர நடுத்தர இளைஞர்களின் வாழ்வியலை நட்பு பாசம் காதல் எனும் உணர்ச்சிகளோடு கலந்து இளமை ததும்ப கொடுத்திருக்கும் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்டுகிறேன்.
ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்று, திரைக்கதை இலக்கணத்தின் எந்த கட்டுக்குள்ளும் அடங்காமல் சுவராஸ்யம்? என்னும் மக்களின் ஒரே ரசனைக்கு வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிற எண்ணற்ற திரைப்படங்களின்
வரிசையில் இததிரைப்படத்தின் காட்சிகளை இயல்பாய் அமைத்திருப்பது ரசிக்கதக்கதோரு பாராட்டுக்குரிய ஒன்றாகும். பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை திரையில் பற்றுடன் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் காண்பித்து, அவர்களின் செயல்களின் மூலம் குணாதிசிபங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து நெடுநாட்களுக்கு நம் மனதில் நிலைக்க செய்துவிட்ட திரைக்கதையாசிரியரை நிச்சயம் பாராட்ட வேவேண்டும்.
கதாபாத்திரங்கள் மிகப்படுத்தாமல் இயல்பாய் பேசுவதும் காட்சிகள் எளிமையாய் இருப்பதும், அதற்கு ஒளிப்பதிவும் இசையும் பலம் சேர்த்திருப்பதும் பிரபுவுக்கு சாதகமான விஷயங்களாக அமைந்திருக்கின்றன. இளையராஜா, அமரன், பாஸ்கர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் எழுபதுகளில் சென்னையின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித்திரிந்த ஞாபகங்களை எங்களுக்குள் துளிரிவிட்ட நட்பை அப்போதைய எங்கள் சந்தோஷத்தை இத்திரைப்படம் மீண்டுமொரு முறை எனக்குள் கிளர்ந்தெழச்செய்தது போல் எனது நணிபர்களுக்கும் ஏற்பருத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
எங்கள் மடியில் தவழ்ந்த பிள்ளைகள் இன்றைக்கு எங்களுக்கு வாழ்வளித்த இதே திரைத்துறையில் விழுதுகளாய் படர்ந்து வேரூன்றுவதை கண்டு மனம் நெகிழ்கிறேன்.
பொத்திவச்ச மல்லிகை மொட்டாய் மறைந்திருந்த இவர்களின் திறமைகள் இன்னும் பல திசைகளில் பரவி பூவாக நறுமணம் வீசி தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சேர்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Here I am sharing the two letters I treasure for life!! A letter from iyakkunar sigaram and iyakkunar imayam!! What more a director need than this?!! #13yearsofchennai28 #KB #BR #vp1 #balachandar #bharthiraja #lettersfrom2007 pic.twitter.com/vKt67Hl61g
— venkat prabhu (@vp_offl) April 27, 2020