மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட நினைவிடம்… சிறப்புகள் என்னென்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
“எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவையை போன்று மீண்டெழுந்து வருவோம்” என்று அதிமுகவினரை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பேசுவது வழக்கம். எனவே அவருடைய நினைவிட கட்டிடம் பீனிக்ஸ் பறவை சாயலில் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவரது சமாதிக்கு மேல்பரப்பில் பீனிக்ஸ பறவை கட்டிடம் அமைந்து உள்ளது. அதேபோல சமாதியின் இடது பக்கத்தில் 8 ஆயிரத்து 555 சதுர அடியில் அருங்காட்சியகமும் வலது பக்கத்தில் அதே அளவில் அறிவுத்திறன் பூங்காவும் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த 2 கட்டிடங்களிலும் உள்கட்டமைப்பு பணிகள் இன்னும் முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல கட்டப்படும் அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் மெழுகு சிலை, அவரது கலை மற்றும் அரசியல் துறையின் சாதனை, பயணங்களின் புகைப்பட தொகுப்பு, அவர் பெற்ற விருதுகள் அடங்கிய புகைப்படம், போன்றவை டிஜிட்டல் வடிவில் இடம்பெற உள்ளன. அறிவுசார் பூங்காவில் தன்னம்பிக்கை ஊட்டும் ஜெயலலிதாவின் பேச்சு தொகுப்புகள் அவர் சொல்லிய குட்டி கதைகள் போன்ற அவரது பேச்சுகள் டிஜிட்டல் வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
அதோடு நினைவிடத்தில் உள்ள சமாதி விலை உயர்ந்த கிரானைட் கற்களை கொண்டு கட்டப்பட்டு உள்ளது. சமாதியின் மீது மக்களால் நான்… மக்களுக்காகவே நான்… அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் பொன்மொழிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன.
இந்த நினைவிடத்திற்கு செல்லும் நுழைவுவாயிலில் பீடத்துடன் கூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. சமாதிக்கு செல்லும் நுழைவுவாயில் முன்பு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கற்களால் கம்பீரத் தோற்றத்துடன் சிங்கத்தின் சிலை வடிவமைத்து நிறுவப்பட்டு உள்ளது.
மேலும் நினைவிடத்துக்கு உள்ளே செல்வதற்காக 2 பக்கவாட்டிலும் 110 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேற்கூரைகள் மீது சூரிய ஒளிதகடு (சேலார்) பொறுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் மின்சாரம் ஜெயலலிதா நினைவிட பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தோட்டக்கலை வல்லுநர்கள் ஆலோசனையின்படி நீர் தடாகங்களுடன் சுற்றுச்சூழலை பறைச்சாற்றும் வகையில் பல்வேறு அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு உள்ளன. மியாவாக்கி தோட்டமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெரினா கடற்கரையை ஒட்டி நினைவிடம் அமைந்துள்ளதால் தட்பவெப்பம், உப்பு காற்றால் கட்டிடம் பாதிக்காத வகையில் பாலியூரிதீன் ரசாயனம் பூசப்பட்ட கான்கீரிட் மேற்பரப்புகள் போடப்பட்டு உள்ளன.
எம்.ஜி.ஆர் சமாதியில் உள்ளது போன்று ஜெயலலிதா சமாதியிலும் அணையா விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. உயர்தர பளிங்கு கற்கள், கிரானைட் கற்கள், கண்ணாடி பீடம், புல் தரைகள், நீர் தடாகங்கள், அழகிய செடி, மரங்கள், வண்ணவண்ண ஜொலிக்கும் சுற்றுலாத்தளம் போன்று ஜெயலலிதா நினைவிடம் காட்சி அளிக்கிறது. இத்தகைய அரும்பணிக்காக பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout