குரங்கணியை டிரெக்கிங் ஆர்வலர்கள் தேர்வு செய்வது ஏன்?

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் தான் இந்த குரங்கணி ஹில்ஸ். பசேலென்ற இயற்கை எழில்வாய்ந்த இந்த மலைப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தென்னை, மா, மசாலாப் பொருட்கள், காப்பி போன்றவை வளர்க்கப்படுகின்றன. உலகின் மிக உயர்ந்த தேயிலை தோட்டம் அமைந்த பகுதிகளில் ஒன்று அதாவது சுமார் 8000 அடி உயரத்தில் தேயிலை தோட்டம் இந்த குரங்கணி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.

கிழக்கே குரங்கணி மலைகளும் மேற்கில் கொளுக்குமலை அமைந்துள்ள இந்த மேற்குதொடர்ச்சி மலையில் அடிக்கடி மாறும் காலநிலையும், தவழும் மேகங்களையும், குளிர்ந்த காலநிலையும், வலுவான காற்றையும் ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிவது உண்டு. இங்கிருந்து உருவாகும் சிற்றோடைகள் ஒன்றிணைந்து கொட்டக்குடி ஆற்றுடன் சேர்ந்து அதன் பின்னர் வைகை அணையை அடைகின்றன. இந்த தண்ணீர்தான் தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரம்

குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு ஏற்ற ஒரு இடம். குரங்கணி மலையின் கிராமத்தில் இருந்து 12 கி.மீ நடந்து சென்றால் டாப் ஸ்டேஷன் என்ற இடம் உள்ளது. இங்கிருந்து கேரளாவின் மூணாறுக்கு அடர்ந்த வனப்பகுதிககள் மற்றும், புல்வெளிகளை கடந்து நடந்தே செல்ல முடியும்.

இந்த பகுதியில் தான் 'அழகர்சாமியின் குதிரை, மைனா, கும்கி போன்ற படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இந்த மலைப்பகுதிகளில் டிரெக்கிங் செல்ல சிறந்த காலமாகும். இந்த இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில்தான் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டு 9 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.