கூகுள் சுந்தர்பிச்சையின் சம்பளம் எவ்வளவு? ஒரு ஆச்சரியமான தகவல்
- IndiaGlitz, [Saturday,December 21 2019]
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்த தமிழகத்தின் சுந்தர் பிச்சை சமீபத்தில் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் என்ற நிறுவனத்திற்கும் சி.இ.ஓவாக பொறுப்பேற்றார். இந்த நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் சி.இ.ஓவாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு வரும் ஜனவரி முதல் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 14.22 கோடி ஆகும்.
அதுமட்டுமின்றி அவருக்கு 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 1700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆல்பபெட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என்றும், 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டில் கூகுள் சி.இ.ஓவாக பதவி உயர்வுபெற்றார். தற்போது சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபேட்டின் சி.இ.ஓவாகவும் பணிபுரிந்து வருகிறார்.