பீகாரில் எந்த காரணத்திற்காகவும் என்.ஆர்.சி நுழையமுடியாது..! நிதிஷ் குமார்.
- IndiaGlitz, [Saturday,December 21 2019]
என்ஆர்சி ஏன் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதனை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கூறிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்
‘‘சிறுபான்மை மக்களின் உரிமையை காப்பதில் எந்த சமரசமும் இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். என்ஆர்சி எதற்காக, பிஹாரில் எந்த காரணத்தை முன்னிட்டும் அமல்படுத்த மாட்டோம்.’’ எனக் கூறினார்.