டிவி பார்ப்பவர்களுக்கும் புத்தகம் வாசிப்பவர்களுக்கும் என்ன வேறுபாடு???

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

 

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது என்கிறார் பிளாட்டோ. ஆனால் உண்மை என்னவோ நம் சமூகத்தில் தலைகீழாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அலமாரிகள் இருக்கிறதோ இல்லையோ இந்தியாவில் 99.9% வீடுகளில் டிவி கண்டிப்பாக இருக்கிறது. டீவிக்கு முன்னாடிதான் படிப்பு, சாப்பாடு, சமையல் எல்லாமே.

நல்ல வளர்ச்சியை விரும்பும் ஒரு சமூகம் உண்மையில் இப்படி இருப்பது சரியானதா? இது குறித்து ஆராய்ச்சிகளும் உளவியல் மருத்துவர்களும் என்னக் கூறுகிறார்கள் என்பதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்.

உண்மையில் வாசிக்கும் ஒரு நபரைப் பற்றி ஒரு சமூகம் என்ன கருதுகிறது??? அதிகமாகப் படிக்கும் நபரைப் பெரும்பாலும் புத்தகப் புழு என்று கிண்டலிப்போம். அவர் தனிமையை விரும்பும் நபர் என்று கருதி பெரும்பாலும் அவரை விட்டு விலகி விடுகிறோம். இதே போல எல்லா புத்தக வாசிப்பாளர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் என்று முடிவும் செய்துவிடுகிறோம். ஏன் புத்தகம் வாசிப்பவர்கள் தனிமையை விரும்புகின்றனர் என்பதைக் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

வாசிப்பது என்பது பலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அது ஒரு கலை என எழுத்தாளர் ஜுலியன் பாக் கூறியிருப்பார். உண்மையில் வாசிப்பு அற்புதமான ஒரு கலையாகத்தான் பலரது மத்தியில் பார்க்கப் படுகிறது. அற்புதமான கலையை அனுபவிக்கும் ஒரு வாசிப்பாளர் தன்னை இடையூறு செய்யும் எந்த ஒரு சாதனத்தையும் சூழலையும் விரும்புவதில்லை. இதனால் தான் டிவி பார்ப்பவர்களுக்கும் புத்தகம் வாசிப்பவர்களுக்கும் இடையில் பெரிய அளவிலான வேறுபாட்டினைக் காண முடிகிறது.

ஒரு நபர் தொடர்ந்து வாசிப்பவராக இருக்கும் போது, தொலைக்காட்சியோ, வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களோ அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. நண்பர்களுடன் தொடர்ந்து அவரால் உரையாட முடிவதில்லை. ஏனெனில் இந்தக் குழுக்கள் அவரை வாசிப்பதற்கு விடுவதில்லை என்பதே முக்கியமான காரணம்.

பொழுதுபோக்கினை விரும்பும் நபர்கள் வாசிப்பாளர்களைப் பார்த்து சரியான ”மண்டை”, “சிரிக்கவே தெரியாது”, ”எதையும் அனுபவிக்க தெரியாதன்” எனக் கிண்டலித்து விட்டு நகர்ந்து விடுவது தான் இதுவரைக்கும் உள்ள வாடிக்கை. ஆனால் வாசிப்பவர்களைக் குறித்து, அறிவியல் காரணங்கள் வேறு வகையான முடிவுகளையே தருகிறது. ”அதிகமாகப் படிக்கும் நபர் அதாவது புனைகதை (Fiction), காமிக்ஸ் போன்றவற்றை வாசிக்கும் ஒருவர் தன்னைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதோடு மற்றவர்களிடம் அன்பான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவார்” என்கிறது. மற்றவர்களிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொள்வதற்காக முயற்சி செய்வார் என்கிறது.

கிங்க்ஸ்டன் பல்கலைக் கழகம், லண்டலில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று புத்தக வாசிப்பாளர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அவர்கள் எந்த வகையான புத்தகங்களை வாசிப்புக்குத் தேர்வு செய்கின்றனர் எனக் கருத்துக் கேட்கப்பட்டது. மேலும் வாசிப்பாளர்கள் சமூகத்துடன் எவ்வாறு உறவு கொள்கின்றனர் என்பதனைக் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்களைப் பார்ப்பவர்கள் மற்றவர்களிடம் மிகுந்த அன்போடு பழகுவதாக நாம் நினைக்கலாம். நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசுபவராகவும் இருக்கலாம். ஆனால் நம்முடைய கருத்து முழுவதும் தவறு என்பதனை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. உதாரணமாகத் தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களைவிட புத்தக வாசிப்பாளர்தான் அதிக கருணை குணம் கொண்டவர்களாக இருப்பது ஆய்வுக்காக நடத்தப்பட்ட சோதனையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், தொலைக்காட்சியைப் பார்ப்பவர்கள் குரூரத் தன்மையோடு, சமூக விரோதத் தனத்தையும் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் டிவி பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்ச்சிகள் உடனடி சந்தோசத்தையும், கோபத்தையும், பழிவாங்கும் குணத்தையும் எளிதாக வரவழைத்து விடுகிறது. டிவியில் வரும் கதாபாத்திரத்தை நாம் என்றே பெரும்பாலான நேரங்களில் நினைத்து விடுவதாக உளவியல் ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

டிவியில் வரும் ஒரு கதாபாத்திரம் எதிரியை பழிவாங்குவதாக காட்சி வரும் போது பார்ப்பவர்களுக்கும் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றி விடுகிறது. ஆனால் புத்தகம் வாசிக்கும் போது இப்படியான பழி வாங்கும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. ஏனென்றால் புத்தக வாசிப்பு, பெரும்பாலும் வாசித்த விஷயங்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அசை போட தூண்டுகிறது. சிந்தனை செய்வதற்கோ அல்லது கற்பனை செய்வதற்கோ அதிகபடியான நேரத்தினை எடுத்துக் கொள்கிறது. அடிப்படையில் அமைதியான சிந்தனை வளர்ச்சிக்கும் (புத்தகம்), உடனடி தீர்வுக்கும் (டிவி) பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதை மிக எளிதாகவே உணர்ந்து கொள்ளலாம்.

புத்தக வாசிப்பில் எல்லா வகையான புத்தகங்களும் ஒரே மாதிரியான விளைவுகளைத் தருவதில்லை. புனைகதைகளை வாசிப்பவர்கள், சிறந்த சமூகத் திறன்களைக் கொண்டு இருக்கின்றனர். புனைகதைகளில் காணப்படுகின்ற கற்பனை வளம், நகைச்சுவை போன்ற உணர்வுகள் மக்களுடன் சிறந்த வகையில் உரையாடுவதற்குப் பயன்படுகிறது.

காதல் மற்றும் நாடகம் சம்பந்தமான வாசிப்புகளில் ஈடுபடுபவர் மற்றவர்களிடம் கருணை உணர்வுடன் பழகுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. கற்பனை இல்லாத (புனைவுகள் இல்லாத) சமூகம், அரசியல், ஆய்வுகள் குறித்த புத்தகங்களை வாசிப்பவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவாளர்களாவும் சாதாரண சமூக நடைமுறைகளுக்கு அலட்டிக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.

புத்தகம், வாசகனுக்கும் படைப்பாளிக்குமான தனி உலகில் ஒரு கற்பனையோடு பயணம் செய்யும் ஒரு அலாதியான பயணம். சில நேரங்களில் யதார்த்தமும் இதில் இணைந்து கொள்கிறது. ஆனால் வாசிப்பு, தான் வாசிக்கும் விஷயங்களைக் குறித்து ஒருவரைச் சிந்தனை செய்ய வைக்கிறது. ஆனால் தொலைக்காட்சி எப்போதும் நிதானமான சிந்தனையைத் தருவதில்லை. உடனடியான விளைவையும் கோபத்தையும் தொலைக்காட்சி வரவழைக்கிறது.

வாசிப்பு ஒரு மனிதனைக் கருணை உள்ளவனாக மாற்றுகிறது. கற்பனை வாதியாக மாற்றுகிறது. வாசிப்பு ஒருவனைப் பண்படுத்துகிறது. வாசிப்பு ஒருவனை ரசிகனாகவும் மாற்றுகிறது. வாசிப்பை நேசிப்போம்.