கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன???
- IndiaGlitz, [Saturday,May 23 2020]
கொரோனா நோய்த் தொற்றானது பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகளின் மூலம் பரவுகிறது என்ற அடிப்படை அறிவியல் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலைமை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் கடந்த மாதம் சீனாவில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே போல அமெரிக்காவில் பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத குழந்தை ஒன்றுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்தே போனது. மேலும் 6 மாத குழந்தை ஒன்றும் அந்நாட்டில் கொரோனாவால் இறந்து போன அவலம் நடந்தேறியது. இப்படியிருக்கையில் தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்கும் கொரோனா பரவுமா என்பதை குறித்து பிபிசி ஊடகம் தரவுகளை வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து நியூயார்க்கின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆதம் ராட்னர், கர்ப்பிணிகளின் சுவாசப் பாதையோடு குழந்தைக்கு தொடர்பு ஏற்படாத வரையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவாது. மேலும் கருவில் இருக்கும்போதோ அல்லது பிரசவத்தின்போதோ குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பில்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலைமையில் மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதித்த 115 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்று இருக்கிறது. அந்த பிரசவத்தில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிரசவம் நடந்த 115 பெண்களுக்கு 56 ஆண் மற்றும் 59 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறையிலே பிரசவம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 குழந்தைகளுக்கு மட்டுமே நோய்த்தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன. மற்ற குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் பாதிப்பு இல்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. 115 பேரில் பிரசவத்திற்கு முன்பே ஒரு பெண் இறந்துவிட்டார். பிரசவத்தின்போது ஒரு பெண் இறந்தார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப் பட்டு இருக்கிறது.
சியான் என அழைக்கப்படும் அரசு பொது மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காகவே தனி வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. 65 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் மற்றும் 3 அறுவைச் சிகிச்சை கூடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் அந்த வார்டில் 84 படுக்கைகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரசவம் நடக்கும்போது மருத்துவர், மயக்க மருத்துவர், ஒரு செவிலி மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் பெண்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலும் கொடுக்கின்றனர். தாய்ப்பாலில் கொரோனா நோய்த்தொற்று இருக்காது எனவும் தாய்ப்பால் குழந்தைகளை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்டது எனவும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. பெரும்பாலும் குழந்தைகளைத் தனிமைப்படுத்தி வைப்பதில்லை என்றும் குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களை கொரோனா வார்டுகளுக்கு மாற்றி விடுவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பாதித்த பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். சிலருக்கு மட்டுமே காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரசவத்திற்கு பிறகு கர்ப்பிணிகளிடம் இருந்து வெளிவரும் நஞ்சுக்கொடியில் கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதைத் தவிர நேரடியாக கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளைத் தாக்கும் அபாயம் எதுவும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராட்னர் பிறந்த ஒரு குழந்தையின் உடலில் ஆன்டிபாடி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி பிறக்கும் முன்பே குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற அடிப்படையில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.