2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை என்ன??? தொடரும் சந்தேகங்களுக்கு விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
கடந்த சில தினங்களாக ATM மெஷின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை உள்ளீடு செய்ய முடியாமல் பலர் தவிர்த்து வந்தனர். ATM மெஷின்களில் பணம் எடுக்கும் போதும் ரூ.500 நோட்டுகளே அதிகமாக இருந்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி மற்றும் பாரத் வங்கி அதிகமாகப் புழங்கவில்லை. இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தப் போகிறதா? என்ற சந்தேகம் எழுப்பப் பட்டது. ]
நேற்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்தார். முன்னதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப் படுமா??? என்ற கேள்வி முன்வைக்கப் பட்டது. இந்தக் கேள்விக்கு நேற்று நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அனுராக் தாகூர் தனது விளக்கத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை எனத் தெரிவித்து இருந்தார்.
மத்திய அரசு பண நோட்டுக்களை அச்சடிக்கும்போது மக்கள் அதிகமாக விரும்பும் நோட்டுகளின் தேவையைப் பொறுத்து, ரிசர்வ் வங்கியின் கருத்துக்களைக் கேட்டப் பின்பே முடிவு செய்கிறது.
இதுவரை ரிசர்வ் வங்கி ரூ. 7.40 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து இருக்கிறது. இதில் ரூ. 5.49 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கின்றன. மேலும், ரூ.93 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மார்ச் 5 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 1.96 லட்சம் கோடி மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.42,784.20 கோடி மதிப்பிலான 50 ரூபாய் நோட்டுகளும், ரூ.16,619.60 கோடி மதிப்பிலான 20 ரூபாய் நோட்டுகளும், மேலும் ரூ.30,510.79 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பணவீக்க அளவை பொறுத்து அமைகிறது. மேலும், கிழிந்த நோட்டுகளை மாற்றும் தேவை பொறுத்தும் இருப்பு குறையும் போதும் என பல காரணங்களை அடிப்படையாக வைத்து ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும், மத்திய அரசு 2019 – 2020 நிதி ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பதற்கு, அச்சங்களுக்கு எந்த விண்ணப்பத்தையும் அளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் அமைச்சர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப் பட வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.