ராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களாக ராஜஸ்தான் அரசியலில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆளும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதைப்போல தற்போது ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை பாஜக சிக்க வைத்து இருப்பதாக காங்கிரஸின் மேலிடம் குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கிறது. சச்சின் பைலட் தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி தாருங்கள் என்றும் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இத்தகைய நெருக்கடியான நிலைமைக்கு காரணம் என்ன என்பதைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப் பட்டு வருகின்றன. ராஜஸ்தான் ஆளும் கட்சியில் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தற்கு அக்கட்சியின் உட்கட்சி பூசலே காரணம் எனக் கூறப்படுகிறது. இன்னொரு தரப்பில் இருந்து பாஜகவே முக்கியக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர். ஆனால் பாஜகவின் சில முக்கியத் தலைவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு போதுமான எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் பாஜக மேலிடம் தேவையில்லாத சர்ச்சையில் சிக்காது எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம் பாஜக எந்த வாய்ப்பையும் நழுவ விடாது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கருத்து நிலைகளில் எது உண்மை? என்ன நடக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததற்கு இவரும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ஆளும் கட்சிக்கு நெருக்கடி நிலைமை உருவாக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
தேர்தல் நடத்தப்பட்ட நேரத்தில் 200 சட்டசபை உறுப்பினர்களில் 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றிப் பெற்று இருந்தனர். பாரதி பழங்குடியினர், ராஷ்டிரிய லோக் தளம், சிபிஎம் ஆகிய மூன்று கட்சியின் சார்பாக 5 எம்எல்ஏக்கள் மற்றும் 12 சுயேட்சைகள் என அனைத்தும் காங்கிரஸ்க்கு ஆதரவாக நின்றன. பாஜகவிற்கு 72 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. மேலும் ஆதரவு கட்சியான ராஷ்டிரிய லோக் தந்திரி கட்சியின் 3 எம்எல்ஏக்களின் ஆதரவு மற்றும் 1 சுயேட்சை ஆதரவும் பாஜவிற்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் சச்சின் பைலட் ஏற்படுத்திய சர்ச்சைக்கு பின்பு காங்கிரஸ்க்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக நேற்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று காலை 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகியதாகவும் அதனால் எம்ஏக்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசும் போது தனக்கு 30 எம்எல்ஏக்களின்ஆதரவு இருப்பதாக கடந்த சில தினங்களாகக் கூறிவந்தார். நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வீடியோவில் வெறுமனே 16 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சச்சின் பைலட் தற்போது ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்தும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியில் இருந்தும் விலக்கப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் சச்சின் பைலட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கட்சி சார்பான அனைத்து விவரங்களையும் அழித்து விட்டதாகத் தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.
சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்கள் தற்போது டெல்லிக்கு அருகில் உள்ள குருகிராமின் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் மேலும் ஜோதிராத்திய சிந்தியாவை நேரில் சென்று சந்தித்தாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் சச்சின் பாஜகவில் இணைவாரா என பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் ஜெய்பூரில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நேற்று அக்கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் சச்சினுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உட்கட்சியில் பிளவு ஏற்பட்டால் ஆட்சி கையைவிட்டு போய்விடுமோ என்ற நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ராஜஸ்தானில் நிலைமையை தலைகீழாக்கி விடுமா என்ற பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments