CAA – NRC - NPR – என்றால் என்ன? இது குறித்த ஒரு விரிவான பார்வை
Send us your feedback to audioarticles@vaarta.com
CAA – இந்தியக் குடியுரிமைச் சட்டம் (Citizenship Amendment Act). NRC – தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens). NPR -தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register).
இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின்பு NPR, NRC பற்றி செய்தி ஊடகங்களில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றன. இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கும், NPR, NRC – க்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக இத்தகைய பிரிவுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் தற்போது நடத்தப்படுகிறது? மக்கள் தொகைக் (Census) கணக்கெடுப்பிற்கும் NPR கணக்கெடுப்புகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறதா என்பன போன்ற விளக்கங்களைக் குறித்த ஒரு அலசல் தற்போதைக்குத் தேவைப்படுகிறது.
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்
இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதனைத் தெளிவுப் படுத்திக் கொள்வதற்காக இந்தியக் குடியுரிமை பற்றிய சட்டம் 1955 இல் கொண்டுவரப் பட்டு 2019 வரை பயன்பாட்டில் இருந்தது. இச்சட்டத்தின்படி, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்று வந்தனர். இந்தச் சட்ட விதிமுறைகளில் அவ்வபோது திருத்தங்களும் செய்யப்பட்டு வந்தன.
தற்போது 2019 இல் மத்திய அரசால் இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது. மேலும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மாநிலச் சட்ட மன்றங்களில் ஒப்புதல் தீர்மானங்கள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
புதிய விதிமுறைகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் குடியேறிய இந்து, சீக்கியம், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்துவம் ஆகிய 6 மதத்தினர்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியும். அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற வேண்டுமானால் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கியிருந்திருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
31.12.2014 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடி இருந்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இத்தேதிக்குப் பின்னர் இந்தியாவிற்குள் குடியேறிவர்கள் என்றால் தன்னை இந்த நாட்டின் குடிமகன்தான் என்பதனை அவர்களாகவே முன்வந்து நிருபித்துக் கொள்ள வேண்டும்.
தற்போதைய போராட்டம்
புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என மாணவர்களும் முஸ்லீம்களும் போராடி வருகின்றனர். இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் குடியுரிமை பெறுபவர்கள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட மாட்டார்கள். அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் யாராக இருந்தாலும் NPR, NRC பதிவேடுகளின் படி ஒரே விதமாகத் தான் மதிக்கப்படுவர். NPR, NRC விதிமுறைகளுக்குப் பொருந்தி வரும்போது அவர்களும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர். ஒரு போதும் மதத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட மாட்டார்கள். மதத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
NRC - தேசிய மக்கள் பதிவேடு
தேசிய மக்கள் பதிவேடு என்பது இந்தியாவில் யார் யாரெல்லாம் குடியிருக்கிறார்கள், இந்தியாவில் குடியிருப்பவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்கள் தானா? என்பதனைச் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டி செய்யப்படும் மக்கள் பதிவேடு ஆகும்.
NRC – தேசிய மக்கள் பதிவேடு என்பது வெறுமனே இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாகவே இருந்தது. 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு, குடியுரிமை பற்றிய விதிகளும் இணைக்கப்பட்டன.
இதன்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கணக்கிடுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அசாமில் NRC கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இந்தக்கணக்கெடுப்பின் முடிவானது கடந்த 31 ஆகஸ்டு, 2019 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் படி 19 லட்சம் பேர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கணக்கெடுப்பு முடிவு கூறுகிறது. இந்த 19 லட்சம் நபர்களில் 7 லட்சம் பேர் முஸ்லீம்கள் ஆவர்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் (12 லட்சம் பேர்) தங்களது அடையாளங்களைக் கணக்கெடுப்பின் போது சமர்ப்பித்து தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் முஸ்லீம்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை என்பதால் தற்போது இவர்களின் குடியுரிமை பற்றிய குழப்பங்கள் நீடிக்கிறது.
NPR – தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தரவுகளை வைத்துக் கொண்டே, NRC தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட உள்ளன.
முதல் படி
ஊராட்சி, மாவட்டம், மாநில வாரியாகக் குடிமக்களின் தரவுகள் சேகரிக்க படவுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் நீலகிரி, சிவகங்கை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் முறையாகத் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பில் எந்த விதமான தகவல்கள் பெறப்படும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஆதார் எண், பெற்றோர்களின் பிறப்பிடம், இந்தியாவில் குடியிருந்த வருடங்களின் எண்ணிக்கை போன்றவை அடிப்படை விவரங்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் படி
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் NRC விதிகளுடன் ஒத்து வருகிறதா எனச் சரிப்பார்க்கப் படும். பெறப்பட்ட NPR தரவுகள், NRC குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளுக்கு முரணாக இருக்கும்போது அவர்கள் இந்த நாட்டில் குடியுரிமை அற்றவர்களாகக் கருதப்படுவர். குடியுரிமை மறுக்கப் படுவர்களை, இந்திய அரசு அகதிகளாகவே கருதும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஊராட்சி, மாவட்டங்கள், மாநிலங்கள் எனப் பெறப்படும் மக்கள் தொகை பதிவேடு, நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடாக உருவாக்கப்பட உள்ளன.
Cencus- NPR இரண்டுக்குமான வேறுபாடு
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பொதுவாக ஓர் இடத்தில் 6 மாதங்களுக்கு மேல் குடியிருப்பவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்துக் கொண்டு விடும். மக்கள் தொகையின் எண்ணிக்கையை கணக்கிடவே இந்தியாவில் Cencus நடத்தப்படுகின்றன.
NPR என்பது தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒருவர் இந்தியக் குடிமகனா என்பதனைச் சரிப் பார்த்துக் கொள்வதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேடும் வேறுபட்டது ஆகும். NPR கணக்கெடுப்புகள் நடத்தப்பட்ட பின்னர் தான் NRC விரிவுப்படுத்த முடியும்.
நாடு முழுவதும் NRC
கடந்த சில வராங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் 2024 க்குள் நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC அமல்படுத்தப் படும் எனக் கூறியுள்ளார். இந்த அறிக்கையின் படி நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவாக்கம் செய்யப் படும்போது, பல்வேறு சிக்கல் தோன்றும் எனத் தற்போது குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
(NRC) இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பின் போது அசாமில் 2014 க்கு முன்பு குடியிருந்த முஸ்லீம்களும் தங்களை இந்த நாட்டின் குடிமக்கள் என உறுதிப் படுத்திக் கொள்ள முடியாது. அதே போல இலங்கையைச் சேர்ந்த இந்தியக் குடியேறிகளைக் குறித்து என்ன முடிவு செய்ய போகிறார்கள் எனவும் குழப்பம் நீடிக்கிறது. அதாவது NRC கணக்கெடுப்பில் இந்தியக் குடியுரிமை அற்றவர்களை, இந்திய அரசு அகதிகளாகவே கருதும். அகதிகளாக ஒதுக்கப் படுவர்கள் எவ்வாறு நடத்தப்படுவர்? அவர்கள் நாட்டை விட்ட வெளியேற்றப் படுவார்களா? என்பன போன்ற தெளிவும் ஏற்படாமலேயே இருக்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் குடியேறிய இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் தங்களை யார் என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்களை வைத்திருப்பர். ஆனால் முதலாம் தலைமுறையாக இந்தியாவிற்குள் குடியேறி இருப்பவர்கள் பெரும்பாலும், இது வரை தங்கி இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் வைத்திருப்பதில்லை. எந்த அடையாள அட்டைகளையும் வைத்திருக்காத முஸ்லீம் மட்டுமல்லாத மற்றவர்களும் இந்த NRC கணக்கெடுப்பில் எப்படி தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள போகிறார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது. சிலர் இரண்டு, மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்திருந்தாலும் எந்த அடையாள அட்டைகளையும் வாங்காமலே வாழ்கின்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பது குறித்தும் தற்போது கேள்விகள் வைக்கப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments