கொரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமான நாசக்காரனை கொன்று விட்டால் என்ன??? ஆய்வு என்ன சொல்கிறது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி என்பதைத் தெளிவு படுத்தி இருந்தனர். வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் எறும்பு திண்ணிகளுக்குப் பரவி மனிதர்களிடம் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மனிதர்களிடம் முதலில் பரவியபோது நோயை ஏற்படுத்தும் தன்மை இல்லாமல் இருந்து, அதற்குப் பின்பு நோய்த்தாக்கும் வலுவானதாக மாறியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் வௌவால்கள் மீது எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் வௌவால்களை அழிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கையால் நிஜமான குற்றவாளி தப்பிவிடலாம் எனவும் விமர்சிக்கப் படுகிறது. குதிரை மூக்கு வடிவிலான வௌவால்களிடம் இருந்து வெளிப்படும் வைரஸ் கிருமிகளோடு 96 விழுக்காடு கொரோனா வைரஸ் ஒத்துப்போவதை விஞ்ஞானிகள் விளக்கி இருந்தனர். ஆனால் மனிதர்கள் தற்போது அனைத்து வௌவால்களையும் குற்றம் சாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நைஜீரியாவை சேர்ந்த டான்ஷி என்பவர் குதிரை மூக்குக் கொண்ட வௌவால்களிடம் இருந்து கொரோனா வகை வைரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிந்து சென்று விட்டது என்ற புதுத் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதனால் வௌவால்களிடம் இருந்து கொரோனா கோவிட் – 19 வைரஸ் மனிதர்களுக்கு நேரடியாக பரவியிருக்க வாய்ப்பில்லை எனவும் உறுதியாகக் கூறுகிறார். இத்தகவலை பிபிசி செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
மேலும், கென்யாவை சார்ந்த மாசாய் மாரா பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையின் மூத்த பேராசிரியராக பணியாற்றும் பால் டபள்யு வெபாலா, “பரிணாம வளர்ச்சி கோட்பாடுகள் படி, மனிதர்களுக்கும் வௌவால்களுக்கும் இடையே நீண்ட இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த வைரஸ், வௌவால்களிலிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டாலும் மனிதர்களுக்கும் வௌவால்களுக்கும் இடையே யாரோ இதை கடத்தி இருக்க வேண்டும்” என உறுதிப்பட கூறுகிறார். இதனால் கடத்தியாக எறும்புத்திண்ணிகள் செயல்பட்டு இருக்கலாம் என் யூகத்திற்கு ஆதாரம் கிடைத்து விட்டது எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
வௌவால்கள் போன்ற உயிரினத்தின் மீது குற்றம் சாட்டுவதை விட மனிதர்களே இந்த செயலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். வன உயிரினங்களின் வாழ்விடங்களை அழிப்பது, காடுகளை அழிப்பது போன்ற செயல்பாடுகளால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அற்று போகிறது. மனிதர்களின் வாழ்விடத்திலேயே விலங்குகளும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் போன்ற கிருமிகள் மனிதர்களுக்கு பரவுவது எளிதாகி விடுகிறது எனவும் டான்ஷி தெளிவுப்படுத்து கிறார். தவறுகளை நம்மிடம் வைத்துக்கொண்டு வௌவால்களை குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று டான்ஷி ஆதங்கப்படுகிறார்.
மேலும் வௌவால்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதால் ஒருவேளை மேலும் பிரச்சனையை தீவிரமாக்கி விடலாம். வௌவால்களின் உறைவிடத்தை கலைப்பதால் அது தேவையில்லாமல் மனித பகுதிகளுக்கு வந்து விடும். அதனால் தேவையில்லாத விளைவுகளும் ஏற்படும் எனவும் எச்சரிக்கப் படுகிறது. வௌவால்கள் மனித இனத்திற்கு சில நன்மைகளையும் செய்கிறது. வௌவால்கள் உண்ணும் பெரும்பாலான பூச்சிகள் மனித இனத்திற்கு தீமையை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை வௌவால்கள் உண்டு விடுவதால் மனிதர்களுக்கு தொல்லை வராமல் பார்த்துக் கொள்கிறது. டெங்கு, மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களை இந்த வௌவால்கள்தான் உண்டு தீர்க்கின்றன. இந்த காரணங்களுக்காக வௌவால்கள் மனித இனத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மகரந்த சேர்க்கை நடத்துவதற்கும், பூச்சிகளிடம் இருந்து விளை பயிரிகளை காப்பதற்கும் வௌவால்கள் அவசியம் இருக்க வேண்டும்.
வௌவால்கள் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தனது தன்மையை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் பெற்றது. எனவே இயற்கைச் சூழலை குலைக்கும் வகையில் ஒரு உயிரினத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்வது தேவையற்ற செயல் எனவும் ஆராய்ச்சியாளர் டான்ஷி கருத்துக் கூறுகிறார். இந்தோனேசியாவில் துரியன் பழங்கள் உற்பத்தி செய்வதற்கு வௌவால்கள் சிறந்த பணியாற்று கிறது. அதுபோல மடகாஸ்கரில் பெருக்க மரங்களின் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறுகின்றனர். வௌவால்கள் விதைகளை ஓர் இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு எளிதாகப் பரவச் செய்கின்றன எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் இயற்கைச் சூழலை குலைக்கும் வகையிலான செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments