ஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது??? பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்!!! விரிவான தொகுப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,June 03 2020]
கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் மிணசோட்டா மாகாணம் மினியா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலக மக்களிடையே இனவெறி குறித்த கருத்துகளை விவாதிக்க வைத்திருக்கிறது. இனவெறி பிரச்சனை பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் கடும் விவாதமாக இருந்து வந்தாலும் தொடர்ந்து அதற்கு தீர்வுக் காணப்படாமல் இருக்கிறது. அமெரிக்கா கலாச்சாரத்திலும், அரசியலும் இனவெறி வேறுபாடு தொடர்ந்து இருந்தவரும் ஒரு சிக்கலாகப் பார்க்கப் படுகிறது. அமெரிக்காவில் இந்தாண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதைத்தவிர இன்னொரு புறம் கொரோனா தாக்குதலும் ஓய்ந்த பாடில்லை. இப்படி ஒரு மோசமான சூழலில்தான் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்.
இச்சம்பவத்தை அடுத்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டங்கள் கொதித்து எழுந்தன. அமைதியான முறையில் ஆரம்பித்த போராட்டம் நாளுக்குள் நாள் வன்முறையாகவும் மாற ஆரம்பித்தது. இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துகள் அனைத்தும் கறுப்பினத்தவர்களை மேலும் அவமானப் படுத்தும் விதமாகவே அமைந்திருந்ததாக விமர்சனம் எழுந்தது. அதிபர் வன்முறையை ஒடுக்குமாறு அளுநர்களுக்கு உத்தரவு கொடுத்தார். டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் இருந்து தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதிபரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக டெக்சாஸின் உயர் காவல் அதிகாரி ஒருவர், “அதிபர் ட்ரம்ப்பிடம் ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கவும்” என்று வெளிப்படையாகவே பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் பல உலக நாடுகளின் தலைவர்களும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களை கையாளத் தெரியாமல் மேலும் அதிகப்படுத்தி வருகிறார் என்ற விமர்சனத்தை வெளிபடுத்த ஆரம்பித்து விட்டனர். இப்படி உலகளவில் பேசு பொருளாக மாறியிருக்கும் ஜார்ஜ் ஃப்ளாயிடுக்கு நடந்த கொடூரம் பற்றி முதலில் காணொலி வெளியிட்டது ஒரு 17 வயது சிறுமி. டார்னெல்லா ஃப்ரேஸர் என்ற அச்சிறுமி அச்சம்பவம் நடக்கும் போது அருகில் இருந்திருக்கிறார். காவல் துறையினர் ஜார்ஜ் ஃப்ளாயிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்து மிரண்டு போன சிறுமி அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார். இச்சம்பவம் குறித்து கேட்ட செய்தியாளர்களிடம் “நான் ஒரு மைனர் பெண், அந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். என்னால் அந்த போலீஸை எதிர்த்து போராட முடியும் என்று கருதுகிறீர்களா? அது ஒரு மோசமான சம்பவம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.
மே 25 ஆம் தேதி நடந்தது என்ன?
ஜார்ஜ் ஃபிளாய்ட் இறந்த அன்று என்ன நடந்தது என்பதை பிபிசி தெளிவாக வெளியிட்டு இருக்கிறது. சம்பவத்தன்று ஜார்ஜ் ஃபிளாய்ட் ஒரு கடைக்குச் சென்று சிகெரெட் வாங்கியிருக்கிறார். அன்று கடையில் யாரும் இல்லை. இதற்கு முன்பு பல தடவை அந்தக் கடைக்கு அவர் வந்திருப்பதாகவும் எந்த பிரச்சனையையும் அவர் செய்ததில்லை என்றும் கடைக்காரர் செய்தியாளர்களிடமும் பின்பு தெரிவித்து இருக்கிறார். சிகெரெட்டை வாங்கிக் கொண்டு ஒரு 20 டாலர் நோட்டைக் கொடுத்து இருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட கடையில் இருந்த ஒரு இளம் வயது ஊழியர் அது கள்ள நோட்டு என்றும் சிகெரெட்டை திருப்பி கொடுக்குமாறும் கேட்டு இருக்கிறார். ஆனால் ஜார்ஜ் ஃபிளாய்ட் தர மறுத்து இருக்கிறார். உடனே கடைக்காரர் 20.1 மணிக்கு 911 உதவி எண்ணுக்கு அழைத்து இருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட் கள்ள நோட்டைக் கொடுத்து சிகெரெட் வாங்கியதாகவும் திருப்பி கேட்டால் தர மறுப்பதாகவும், அதோடு அவர் மது அருந்தி இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டு இருக்கிறது. 20.8 மணிக்கு போலீஸ் வந்திருக்கிறது.
அப்போது ஜார்ஜ் ஃபிளாய்ட் தனது இரண்டு நபர்களுடன் கடைக்கு வெளியே நிறுத்தி இருந்த காரில் அமர்ந்து இருக்கிறார். முதலில் தாமஸ் லேன் என்ற போலீஸ் அதிகாரி துப்பாக்கியைக் காட்டி வெளியே வந்து கைகளைக் கட்டுமாறு கட்டளையிட்டு இருக்கிறார். எதற்கு துப்பாக்கி என மிரண்டு போன ஜார்ஜ் ஃபிளாய்ட் வெளியே வர மறுத்ததாகவும் பின்பு அவரை காரை விட்டு வெளியே இழுத்துப் போட்டு கைவிலங்கு மாட்ட முயன்றதாகவும் தாமஸ் லேனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
கை விலங்கு மாட்டப்பட்ட பின்பு பக்கத்தில் இருந்து போலீஸ் வாகனத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட்டை ஏற்ற முயன்றிருக்கின்றனர். அப்போதுதான் கள்ள நோட்டு விவகாரத்தில் அவரை கைது செய்வதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உடனே கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. காவல் வாகனத்தில் அவர் ஏற மறுத்து இருக்கிறார். அப்போது அருகில் இருந்த மற்றொரு காவல் அதிகாரியான சாவின் அவரை இழுத்து வாகனத்திற்குள் தள்ள முயற்சி செய்திருக்கிறார். அப்போது மணி சரியாக 20.19. ஆனால் முரண்டு பிடித்த போது ஜார்ஜ் ஃபிளாய்ட் தவறி கீழே விழுந்து இருக்கிறார். கீழே விழுந்தவரின் கழுத்தில் சாவின் தனது பூட்சுகாலை வைத்து கடும் அழுத்தத்தைக் கொடுத்து மிதிக்க ஆரம்பித்து இருக்கிறார். பக்கத்தில் இருந்த பல பேர் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர். 20.19 க்கு அழுத்த ஆரம்பித்த சாவின் 20.17 க்குத்தான் தனது காலை எடுத்ததாகவும் 6 நிமிடங்களுக்கு குறைவாகவே ஜார்ஜ் ஃபிளாய்ட் உணர்வற்ற நிலைக்கு சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அழுத்தும்போது பல முறை காலை எடுங்க வலிக்கிறது என அவர் கத்தியதாகவும் கடைசியில் அவர் மா என்று கத்தியதாகவும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
உணர்வற்ற நிலைக்கு சென்றபின்பு டென்டெயன் கவுண்டி மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். சரியாக ஒரு மணிநேரம் கழித்து உயிரிழந்து விட்டதாக தகவல் அறிக்கை வெளியிடப் பட்டு இருக்கிறது. எல்லாச் சம்பவங்களும் குறைந்தது 30 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. ஜார்ஜ் ஃபிளாய்ட் டெக்சாஸை சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு மினியாக பொலிஸ் பகுதியில் வந்து குடியேறினார் என்றும் கூறப்படுகிறது. அதோடு அவர் பவுன்சராக வேலைப் பார்த்து வந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கினால் அமெரிக்காவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் இவரும் ஒருவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.