ஊரடங்கு முடிந்தாலும் சுய கட்டுப்பாடு வேண்டும்: பிரபல நடிகை
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
கொரோனா வைரஸ் பிரச்சனை, ஊரடங்கு பிரச்சனை ஆகியவை முடிந்தபின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்க்கு திரும்பியதுடன் என்ன நடக்கும் என்பது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்டதும் பொதுமக்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு டாடா கொடுத்துவிடுவார்கள் என்றும், சேமிப்பு, சிக்கனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் உள்ளூர் அண்ணாச்சி கடைகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை லட்சுமிராயும் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊரங்கு முடிந்ததும் சிலர் தேச பக்தியோடு ரோட்டுக்கு வந்து கொடி பிடித்து கொண்டாடுவார்கள், கொரோனாவை வென்று விட்டோம் என்று பாடல் பாடுவார்கள், சுதந்திரமாக வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படும். அங்கு மக்கள் திரள்வார்கள்.
சில கார்பரேட் நிறுவனங்கள் ஊரங்கு நாட்களில் இழந்ததை திரும்ப பெற ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்கும். கொரோனாவாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு போனவர்கள் பிழைக்க வந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும், முககவசங்கள் தூக்கி எறியப்படும், கை கழுவுதல் மறந்து போகும். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொரோனா புறப்பட்டு வரும்.
இதை தவிர்க்க வேண்டுமானால் கொரோனாவை 100 சதவிகிதம் விரட்டும் வரை சுய கட்டுப்பாடு கொண்டு நடக்க வேண்டும், குறிப்பாக சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், விழாக்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.