கொரோனா விஷயத்தில் சமூக ஊடகங்கள் என்ன செய்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலை அடுத்து சமூக ஊடகங்களில் நம்பகத்தன்மையில்லாத பல வதந்திகள் பரவத் தொடங்கின. இந்த வதந்திகளால் கண்மூடித்தனமான பாதிப்புகளும் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மதுவருந்தலாம் என்று பரவிய தவறான வதந்தியால் ஈரான் நாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தை குடித்து இறக்க நேரிட்டது. கொரோனாவிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விஷயங்களிலும் உண்மைக்கும் மாறான தவறான வதந்திகள் பரவுவதும் தற்போது இயல்பான செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது.
கொரோனா தொற்று நோய்க்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளைக் குறித்து கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வினை நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் கொரோனா நோய்ப்பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் மனநிலையைத் தெரிந்துகொள்ளவும் வதந்திகளைப் பரப்புவதற்கான காரணத்தைக்குறித்து தெரிந்துகொள்ளவும் உதவும். ஒருபுதிய நோய்த்தொற்று இந்த உலகத்தில் ஏற்படும்போது அதுகுறித்த உண்மையைத் தன்மை அல்லது வீரியத்தை நம் மூளை முதலில் உள்வாங்கிக்கொள்ள மறுக்கிறது என்பதும் அடிப்படையான காரணமாகச் சொல்லப்படுகிறது. கொரோனா எப்படி பரவியது என்பதையே பல உலகத்தலைவர்கள் முதற்கொண்டு விஞ்ஞானிகள் இன்றுவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.
கொரோனா உற்பத்தி செய்யப்பட்ட வைரஸ்தான் என விஞ்ஞானிகள் கூட கருத்துப்பரப்பி வருகின்றனர். இப்படியிருக்கையில் உலக நாடுகளுக்கிடையிலான எதிர்ப்பு அரசியல், வர்த்தக அரசியல் நிலவிவரும் சூழலில் உலகத் தலைவர்களுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது போல ஆகிவிடுகிறது. பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூக்காஷென்கோ “கொரோனா வைரஸ் இங்கு சுற்றித்திரிகிறதா? எங்கே காட்டுங்கள்” என செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்து இருந்தார். அவரே இதை எதிர்கொள்ள “வோட்கா அருந்தினால் போதும் தப்பித்துக்கொள்ளலாம்” எனவும் குறிப்பிட்டு பேசினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பற்றி அலட்டிக்கொள்ளாமல் முதலில் பொருளாதார வர்த்தகத்தை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தார். அந்த வைரஸ் ஏதோ சாதாரண சளி போன்று தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பது போல் அவரே மருந்து பெயர்களையும் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து எனக்கு நன்றாகத் தெரியும் எனப் பலமுறை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று நோய்த்தொற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகிறார் என்கிற ரீதியில் பலத்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இவ்வளவுக்கும் மேல் கையாலாகாதத் தனத்தால் சீனாவின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸை பற்றி புரிந்துகொள்வதில் சமூக ஊடகங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தலைவர்களுக்கே ஏதோ இடர்பாடு இருப்பதாகவும் தெரிகிறது என ரெஜினா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பென்னிகுக் குறிப்பிட்டுள்ளார். இப்படி உலகமே தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகும்போது சமூக ஊடகங்களும் தன் பங்கிற்கு சிறப்பான பணியை ஆற்றிவருகிறது. மதுவருந்தினால் கொரோனா போய்விடும், அதிக வெப்ப நிலையில் கொரோனாவால் வாழமுடியாது, டீக்குடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திவிட்டால் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல வதந்திகள் சமூக ஊடங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இது உலகளவில் என்றால், நமது உள்ளூரில் சித்த வைத்தியம், வேப்பிலை, மஞ்சள் என்று இன்னும் புராதனக் காலத்திற்கு நம்மை இழுத்து செல்கின்றன. இல்லை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, நமது முன்னோர்களின் வைத்தியமுறை இது; வேப்பிலை, மஞ்சளில் அதிகளவு கிருமிநாசினிகள் இருக்கின்றன என்கிற ரீதியில் பதில் வதந்திகளும் பரப்பப்படுகின்றன.
உண்மையில் வேப்பிலை, மஞ்சள் போன்றவை கிருமிநாசினி பொருட்கள் என்று மருத்துவ உலகம் அங்கீகரிக்கவில்லை. இவை காலம்காலமாக நம்பப்பட்டு வரும் நம்பிக்கைகள் மட்டுமே. பல மருந்துபொருட்களுக்கு வேப்பிலை, மஞ்சள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த பயன்பாடுகள் காலப்போக்கில் மக்களை அப்படி நினைப்பதற்கு தூண்டியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
வதந்திகளைப் பரப்புவதற்கு அடிப்படை காரணம்
கொரோனா மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் வதந்திகளை பரப்புவதற்கு அடிப்படைக்காரணமாக இருப்பது மனிதனின் உள்ளுணர்வு மட்டுமே. பொய்யானவை எனத் தெரிந்தும் ஆலோசிக்காமல் வதந்திகள் திரும்ப திரும்ப பரப்பப்படுகின்றன. ஒரே பொய் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து பரப்பப்படும்போது அவை உண்மை போன்ற தோற்றம் கொள்கிறது. இந்த உண்மைத்தோற்றம் கடைசியில் உண்மையாக மக்களிடம் உலவிவருகிறது. இதுதான் தற்போது சமூக ஊடகங்களில் நடந்துவருகிறது.
ரெஜினா பல்கலைக்கழகம் நடத்திய கொரோனா வதந்திகள் பற்றி ஆய்வில், கொரோனா பற்றி தவறான வதந்திகளைப் பரப்புவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு மக்களுக்கு அது வதந்தி என்பது தெள்ளத்தெளிவாக தெரியுமாம். அதையும்விட அப்படி தனக்கு வந்த வதந்திகளை, அது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிந்தே 35 விழுக்காட்டினர் அதை மீண்டும் மற்றவர்களுக்கு திருப்பி அனுப்பிவருகிறார்கள். ஆக, வதந்தி எனத் தெரிந்தே 10 விழுக்காட்டினர் மீண்டும் மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.
எதற்காக இப்படி செய்யப்படுகிறது என்றால், ஒரு குறுஞ்செய்தி அவர்களை வந்தடைந்தவுடன் மனித மூளை பெரும்பாலும் அது உண்மையா ? என்ற ஆலோசனைகளில் ஈடுபடுவதில்லை எனத் தெரியவந்திருக்கிறது. ஒரு படம் அல்லது புள்ளிவிவரங்களுடன் அந்த செய்தி பகிரப்பட்டு இருக்கும்போது அந்தச் செய்தி மேலும் அதிக உண்மைத்தன்மைப் பொருந்தியதாகப் பார்க்கப்படுகிறதாம். இதிலிருந்து தனது அறிவை பகுத்து பார்ப்பவர்கள் மட்டுமே இந்த செய்தியை யார் எழுதியிருக்கிறார்கள், அறிவியல் உதாரணங்கள் இருக்கிறதா? இதை நம்பலமா? வேண்டாமா ? என அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு போகிறார்களாம்.
ஆனால் ஒரு குறுஞ்செய்தி குறித்து தற்போதைய நாகரிக மனிதர்கள் இப்படி கடுமையான விவாதங்களுக்கெல்லாம் போவதேயில்லை, அவர்கள் தங்களுக்கு அனுப்பப்படுகின்ற குறுஞ்செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து விட்டு உண்மை எது? சரி எது? என அவர்களே கண்டுபிடித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். நவீன மனிதர்கள் எதையும் சோம்பலாகவே செய்து முடிக்கின்றன. வெறுமனே ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் இன்றைய நிலைமையை பொறுத்த வரையில் அதொரு ஈடுபாட்டை வரவழைக்கும் ஒரு யுக்தியாக மட்டுமே பயன்பட்டு வருகிறது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. எவ்வளவு லைக்குகள், கமென்டுகள் வருகிறது, யாராவது தனது செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காகவே அதிகளவு வதந்திகள் பரப்பப்படுகிறதாம்.
அதுமட்டுமில்லாமல் ஒரு செய்திக்கு, தான் சொல்லும் எதிர்க்கருத்துகள் எவ்வளவு பேரை மேலும் ஆத்திரமூட்டுகிறது? அதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள் எனப் பலரைத் தேட வைக்கிறதாம். இப்படித்தான் படித்தவர்கள் முதற்கொண்டு படிக்காதவர்கள் வரை அனைவரும் போலிக்கும், விவாதத்திற்கும் அடிமையாகி வருகிறார்கள். உண்மையில் விவாதம் ஒரு வளமான ஆற்றலைக் கொண்டது. ஆனால் சமூக ஊடகங்களில் மிகவும் விறுவிறுப்பாக விவாதம் செய்துவருபவர்கள் பெரும்பாலும் வதந்திகளை அடிப்படையாக வைத்துக்கொண்டே விவாதம் செய்து வருகிறார்கள். அவர்களின் கருத்துகளில் அறிவியல் பார்வை மிகவும் குறைவாகவே இருக்கிறது. நமது உள்ளூரில் இந்த விவாதம் சாதி, மதம், திருமணம், ஆண்பெண் வேறுபாடு என இன்னும் அடிமட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்துக்களின் மீது நாம் முதலில் செய்ய வேண்டியது ஒரு செய்தியைப் படித்தவுடன் தோன்றும் ஆரம்பக் கருத்தின்மீது நமது அறிவை செலுத்தி அதை ஆலோசிக்க வேண்டும். அடுத்து மற்றவர்களுக்கு பயனுள்ளதா எனப் பலதடவை சிந்தனைக்குள் விவாரணை நடத்தியப் பின்பே அதை பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்படி பரப்பப்படும் கருத்துகளில் சார்பு தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வதந்திகளில் பெரும்பாம் சார்புத்தன்மை இருக்கும். இதை தவிர்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது உணர்வுபூர்வமான ஈடுபாட்டில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதும் அடிப்படையான அம்சம். தேவையில்லாத அதீத ஆர்வமும், சமூகத்திற்கு இந்த செய்தி முக்கியமானது, நோயிலிருந்து இந்த செய்தி மற்றவர்களைக் காப்பாற்றும் என்ற கற்பனையான உணர்வுகள் அபாயத்திற்குத் தள்ளிவிடுகிறது. இந்த உணர்வுமேலீடுகளால் தான் இந்த தலைமுறையினரின் கருத்துக்கள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதில்லை எனவும் கருத்துக் கூறப்படுகிறது. ஒரு விஷயத்தைக் குறித்து விமர்சிப்பவர்கள் வெறுமனே சமூக ஊடகங்களில் சில ஆக்ரோஷமான கருத்துகளை தெரிவித்து விட்டு அடுத்த ஆக்ரோஷத்திற்கு நகர்ந்து செல்கின்றனர். இந்த தன்மையால் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றங்களையோ, எதிர்ப்பையோ எற்படுத்த முடிவதில்லை.
கொரோனா நேரத்திலும் சமூக ஊடகங்கள் இப்படி வதந்திகளால் குதூகலித்து வருவதை பல நாடுகள் கட்டுப்படுத்த முயல்கின்றன. கருத்துக்கள் சார்புத் தன்மையில்லாமல் அறிவியல் பார்வை கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்ப்பதே சமூக ஊடகங்களில் பயணிப்போர் செய்ய வேண்டிய முதல் வேலை. இப்படி செய்யும் பட்சத்தில் எந்த ஒரு ஊடகத்தையும் பயனுள்ளதாக மாற்றமுடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments