பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்புக்கு என்ன காரணம்??? இந்தியாவில் இதன் தாக்கம் எப்படியிருக்கும்???
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலைவன வெட்டுகிளிகள் தற்போது இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வின் உணவு வழங்கல் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு இதுவே முதல் முறையா என்ற கேள்வியும் முன்வைக்கப் படுகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பாகிஸ்தான் வழியாக, இந்தியா, பங்களாதேஷ், ஈரான், ஆப்கானிஸ்தான் என்று ஒரு நீண்ட தூரத்துக்குப் பல முறை கடும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. 1930 – 60 காலக்கட்டங்களில் பல ஆப்பிரிக்க நாடுகள் வெட்டுகிளிகளின் படையெடுப்பால் கடும் வறுமையை சந்தித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கிறது. தற்போது, வெட்டுக்கிளிகளின் இத்தகைய படையெடுப்புக்கு பருவநிலை மாற்றங்களே காரணம் எனவும் ஐ.நா. உணவு வழங்கல் அமைப்பின் சார்பாக கூறப்பட்டு உள்ளது.
பொதுவாக வெட்டுகிளிகள் தனியாக வாழும் ஒரு பூச்சியினம். ஆனால் பருவ நிலை மாற்றங்களால் வெட்டுகிளிகளும் உணவு பஞ்சத்துக்குத் தள்ளப்படுகிறது. இப்படி வறுமையின் பிடியில் சிக்கும் வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஒன்றுசேரும் வெட்டுகிளிகளின் குணம் ஒரு வேட்டையாடும் விலங்கினத்தைப் போல மாறிவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பெரும் கூட்டமாக படையெடுக்கும் இந்தக் கூட்டம் ஒன்று சேர்ந்து பறக்கும் போது பெரும் அழிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரேபியா தீபகற்பத்தில் ஏற்பட்ட சூறாவளி, பெரும் மழையின் காரணமாக இப்போது இந்தப் பாலைவன வெட்டுகிளிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் FAO தெரிவித்து இருக்கிறது.
தற்போது வட இந்திய மாநிலங்களாக ராஜஸ்தான், குஜராத், ஜெய்ப்பூர், போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 24 மாவட்டங்களை பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு நாசம் பண்ணியிருக்கிறது. இந்தப் படையெடுப்பு இந்தியாவிற்கு புதியதும் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. பல முறை இந்தியாவில் வெட்டுகிளிகளின் தாக்குதல் ஏற்பட்டதால் அதைக் கண்காணிப்பதற்கு என்று இந்திய வேளாண் துறையின் சார்பாக 1946 இல் ஒரு தனி குழுவே ஏற்படுத்தப் பட்டு இருக்கிறது.
வெட்டுகிளிகள் பொதுவாக முட்டையிட்டு குஞ்சுப் பொறிக்கும் ஒரு இனம். ஆனால் இனப்பெருக்கத்தை மிகவும் விரைவாக நடத்திவிடும் தன்மையும் இதற்கு உண்டு. வெட்டுகிளிகள் கால நிலை மாற்றங்களால் தனது இருப்பிடத்தை விட்டு உணவுக்காக பெருங்கூட்டமாக பறக்க ஆரம்பிக்கின்றன. அப்படி பறக்கும்போது சுமார் 1 சதுர கிலோ மீட்டர் வெட்டுகிளி கூட்டத்தில் குறைந்தது 10 கோடி வெட்டுகிளிகள் வரைக்கும் இருக்குமாம். ஒரு வெட்டுகிளி ஒருநாளைக்கு தன் எடையைவிட இரண்டு மடங்கு உணவை உட்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இதனால் சுமார் 2 கிராம் அளவிற்கு உணவை உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஒரு கூட்டம் படையெடுத்தால் சுமார் 150 முதல் 200 கிலோ மீட்டர் வரை பறக்குமாம்.
மேலும், இந்த வெட்டுகிளிகள் சாதாரணமாக 3 முதல் 5 மாதங்கள் வரை வாழ்கின்றன. படையெடுத்து நாடு நாடாக பறந்து சென்று பயிர்களை நாசம் செய்யும் வேலையில் ஈடுபட்டாலும் தனது இனப்பெருக்கத்தையும் கைவிடுவதில்லை. படையெடுக்கும் இந்த வெட்டுகிளிகள் குறைந்தது 2 மாதத்தில் தன்னுடைய கூட்டத்தை விட 20 மடங்கு வெட்டுகிளிகளை உற்பத்தி செய்துவிடுமாம். இந்த அளவு 6 மாதத்தில் 400 மடங்காகவும் 9 மாதத்தில் 80 ஆயிரம் மடங்காகவும் பெருகவும் செய்கிறது என FAO தெரிவித்து இருக்கிறது. இதன் இனப்பெருக்கம் மிகவும் குறுகிய காலத்தில் இருப்பதால் ஒரு கூட்டம் அழிவதற்கு முன்பே மற்றொரு கூட்டம் தயராகி விடுகிறது. எனவே இதை அழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வெட்டுகிளிகளைப் பார்த்து நாம் பயப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முக்கியக் காரணமும் இருக்கிறது. 1 சதுர கிலோ மீட்டர் தூரத்தில் பறக்கும் வெட்டுகிளிகள் சுமார் 35 ஆயிரம் மனிதர்கள் உட்கொள்ளும் உணவை காலி செய்துவிட கூடிய வல்லமையைப் பெற்றிருக்கிறது. இந்த அதிசூர வேட்டையைப் பார்த்துத்தான் தற்போது உலக நாடுகளே பயந்து போய் இருக்கின்றன.
ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த மாதத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த வெட்டுகிளிகள் கூட்டம் யேமன், சௌதி அரேபியா போன்ற நாடுகளை ஒரு வழி செய்து விட்டு அங்கு இனப்பெருக்கத்தையும் நடத்தியிருக்கிறது. பின்னர் கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக சோமாலியா, எத்தோப்பியாவில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்களை நாசம் செய்திருக்கிறது. இப்போது ஒட்டுமொத்தக் கூட்டம் கென்ய விவசாய நிலங்களில் டேரா போட்டு இருக்கின்றன. சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. எனவே நெருக்கடி நிலைமையை அந்நாடுகள் அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜெய்ப்பூர், குஜராத் என இந்தியாவில் தனது அழிவு வேலையை ஆரம்பித்து இருக்கும் இந்தக் கூட்டம் பருவநிலை காரணமாக தென் இந்தியா, ஒடிசா, இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும் வேளாண் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் தற்போது வெப்பநிலை சற்று தணிந்து மழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால் ஆப்கானிஸ்தான், ஈரான் நாட்டிற்கு இந்த படையெடுப்பு செல்ல வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
தென்னிந்தியாவிற்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்று பல வோளாண் ஆய்வாளர்கள் கூறியிருக்கும் இந்நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான வெட்டுகிளிகள் சாலை யோரச் செடிகளின் அமர்ந்து அழிவை வேலையை ஆரம்பித்து இருக்கிறது. எனவே வேளாண் அதிகாரிகள் தங்களது ஆய்வைத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முன்பு மதுரை, கன்னியாக்குமரி போன்ற மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்ததாகவும் அதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததாகவும் இலக்கியங்களும் வரலாற்று நூல்களும் ஒருபக்கம் தரவுகளை அள்ளி குவித்து வருகிறது. எனவே இந்தியா முழுவதும் வோளாண் துறை இயக்குநர்கள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com