கொரோனா நோயின் புதுப்புது அறிகுறிகள் என்ன??? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
- IndiaGlitz, [Friday,May 08 2020]
கொரோனா பாதித்தவர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு, சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என உலகச் சுகாதார நிறுவனம் தெளிவு படுத்தியிருந்தது. கொரோனாவின் தீவிரமான நிலையில் பலருக்குச் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தியது. சிலக்கு வயிற்றுப்போக்கு கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதற்கடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு வாசனை நுகர்வில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து, கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு அடிப்படையில் சளி, இருமல் போன்ற பாதிப்புகளோடு சுவாச உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் வாசனையை நுகர்வதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். பொதுவான அறிகுறிகளை கொரோனா அறிகுறிகளாகக் கருதமுடியாது எனவும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர். இதைத்தவிர கொரோனாவின் தன்மைகளும் பாதிப்புகளும் நாளுக்குள் நாள் வேறுபட்டு வருவதையும் விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர்.
கொரோனா SARS-Covid-2 வகை வைரஸ் என்பது மேலும் 10 வகைகளைக் கொண்டது என இந்திய விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுகளில் தெளிவுபடுத்தி இருந்தனர். மனித சுவாசப் பாதைகளில் காணப்படும் செல்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 புரதத்தை பற்றிக்கொள்வதற்கு வசதியாக கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. புதிய கொரோனா வைரஸின் A2a வகைதான் தற்போது அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் இந்திய விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். மேலும், GISAD வின் கருத்துப்படி கொரோனா வைரஸில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரபணு வரிசைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக, கொரோனா வைரஸின் தன்மைகள், பரிணாமம், வகை, நோய் பரவும் விகிதம் போன்ற புரிந்து கொள்ள முடியாத பல தகவல்கள் இருக்கின்றன. இந்நிலையில் கொரோனா ஏற்படுத்தும் புதிய அறிகுறிகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு அடி பாதம் மற்றும் பாதத்தின் பக்கவாட்டில் தோலின் நிறம் பழுப்பாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது. அரிப்பு, சரும பாதிப்பு போன்ற பிரச்சனைகளையும் கொரோனா ஏற்படுத்தியிருப்பது தற்போது சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆய்வு இதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி பல நாடுகளிலும் இந்த புதிய அறிகுறிகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இத்தாலியில் கொரோனா பாதித்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கால் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலருக்கு அடி பாதம் மற்றும் பாதத்தின் பக்கவாட்டு தோல் பழுப்பு நிறமாக மாறியிருக்கிறது. இந்த புதிய அறிகுறிகளை “கோவிட் பாதம்” என்ற பெயரால் தற்போது மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
பிரிட்டனில் சில கொரோனா நோயாளிகளுக்கு கண்கள் இளஞ்சிவப்பாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸால் சுவாச மண்டலத்தின் மேல்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் இளஞ்சிவப்பாக மாறுகிறது என அந்நாட்டு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதைத்தவிர சீனாவில் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 214 கொரோனா நோயாளிகளில் 36% பேருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. நரம்பு மண்டல பாதிப்பினால் பல கொரோனா நோயாளிகளுக்கு மயக்கம் மற்றும் தலைவலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு ரத்த ஓட்டம் தடைப் படுவதால், தோல் நிறம் மாறுவது ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 375 கொரோனா நோயாளிகளில் 6 % பேருக்கு தோல் நிறம் பழுப்பாக மாறியிருக்கிறது. மேலும் சிலருக்கு கண்கள் இளஞ்சிவப்பாகவும் மாறுவது தெரிய வந்துள்ளது. இதைத்தவிர நியூயார்க்கில் கொரோனா நோயாளிகளுக்கு உடல் எரிச்சல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ்க்கு எதிராக மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் எதிர்ப்பு புரதங்களை வேகமாக சுரக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தில் வேகமான செயல்பாட்டினால் கொரோனான நோயாளிகள் உடல் எரிச்சலை உணர்கிறார்கள் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.