அமைச்சரா இருந்தா என்ன??? யாரா இருந்தா என்ன??? ரூல்ஸ்னா ரூல்ஸ்தா… கெத்து காட்டிய பெண் போலீஸ்!!!
- IndiaGlitz, [Monday,July 13 2020]
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தது மட்டுமல்லாமல் நான் யார் தெரியுமா என்று கெத்து காட்டியவர்களிடம் நீங்கள் யாராக இருந்தால் என்ன? விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள் என்று ஒரு பெண் போலீஸ் கண்டிப்புடன் நடந்து தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இந்தியாவில் கொரோனா ஊரடங்கு மார்ச் 23 இரவு முதல் அமலில் இருந்து வருகிறது. இதில் பல விதிமுறைகள் தளர்வு, தேவைப்படும் நேரத்தில் நெருக்குதல் என மாறிமாறி வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டாலும் எப்படியாவது குறுக்கு வழியைப் பயன்படுத்தியாவது வெளியே சென்று வரலாம் என நினைப்பவர்களும் உண்டு. பல நேரங்களில் போலி இ பாஸ் பயன்படுத்தவதாகவும் குற்றச்சாட்டு வரத் தொடங்கியிருக்கிறது. அதைப்போல ஒரு சம்பவம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று இருக்கிறது. அந்தச் சம்பவம்தான் தற்போது இந்தியா முழுக்க கடும் பரபரப்பாகி இருக்கிறது.
கடந்த வாரம் குஜராத்தின் சூரத் பகுதியில் சுனிதா யாதவ் என்பவர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். அப்போது ஒரு காரில் 5 பேர் அமர்ந்து கொண்டு மாஸ்க் கூட அணியாமல் பயணம் செய்திருக்கின்றனர். ஏன் விதிமுறைகளை மீறி வெளியே வந்தீர்கள் என சுனிதா கேள்வி எழுப்பியபோது நாங்கள் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் தோழர்கள். எங்களை போக விடுங்கள் எனக் கூறியிருக்கின்றனர். அதற்கு பெண் காவலர் சுனிதா இந்நேரத்தில் பிரதமரே வெளியே வந்தாலும் ஏன் வந்தீர்கள் என கேட்பேன். உங்களை வெளியே வர யார் அனுமதித்தது என மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
வாக்குவாதம் நடைபெற தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரகாஷ் கனானி சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சுனிதா மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். மேல் அதிகாரிகள் உடனே அந்த இடத்தை விட்டு சுனிதாவை வெளியேறுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் சுனிதாவும் அந்த இடத்தைவிட்டு வெளியே சென்றிருக்கிறார். இதையடுத்து சம்பவ இடத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக எடுத்து இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கடமை தவறாத பெண் காவல் சுனிதா யாதவிற்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அமைச்சர் மகன் பிரகாஷ் கனானிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இருக்கிறது. விதிமுறைகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த குற்றத்திற்காக 5 பேரும் கைது செய்யப்பட்ட உடனே ஜாமீனில் இருந்து வெளியே வந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.