கனமழை எதிரொலி: கமல் எச்சரித்த வடசென்னையின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தீர்க்கதரிசனமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டரில் வடசென்னை பகுதியில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதால் கன மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி வடசென்னைக்கு ஆபத்து என்று எச்சரிக்கை செய்திருந்தார். மேலும் தவறு நடந்த பின்னர் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் எண்ணூர் பகுதிக்கு நேரடியாக சென்று அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்

இந்த நிலையில் கமல்ஹாசன் கூறியபடியே வடசென்னை பகுதியில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ஒரே ஒரு நாள் பெய்த மழைக்கே அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்க பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்களும், பேருந்துகளும் ஆங்காங்கே பழுதாகி நின்றுவிடுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. கனமழை, வெள்ளம் குறித்து அச்சப்பட வேண்டாம், தகுந்த முன்னேற்பாடுகள் செய்துள்ளதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிக்கின்றது. இந்த நிலையில் மழை இன்னும் ஐந்து நாள் தொடரும் என்று வானிலை அறிக்கை கூறியிருப்பதால் இன்னும் சென்னை மக்கள் என்னென்ன துன்பங்கள் அனுபவிக்க வேண்டிய நிலை இருக்குமோ தெரியவில்லை? இந்த பகுதியில் உடனடியாக பேரிடர் மீட்புப்பணியினர் விரைந்து வந்து தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.