இனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா?
- IndiaGlitz, [Saturday,May 25 2019]
திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் பல நடிகர்கள் ஜீரோவாகி போனதால் இனிமேலும் நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வராது என்றே கணிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் நடிகர்களில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தது எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என்ற இரண்டே பிரபலங்கள் தான். திரை நட்சத்திரங்களாக இருந்தாலும் இருவரும் அடித்தட்டு மக்களை புரிந்தவர்கள், மக்களோடு மக்களாக இருந்தவர்கள், அரசியலில் நடித்து கொண்டே ஈடுபட்டவர்கள் என்பதால் இவர்களால் அரசியலிலும் சாதிக்க முடிந்தது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதா காப்பாற்றினாரே தவிர அவர் தனியாக கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர், என்.டி.ஆருக்கு பின் முதல்வர் கனவில் அரசியல் கட்சி ஆரம்பித்த யாரும் இன்று வரை சோபிக்கவில்லை. உதாரணமாக சிவாஜி கணேசன், சரத்குமார், விஜயகாந்த், சீமான், பாக்யராஜ், டி.ராஜேந்தர் கடைசியாக கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி ஆரம்பித்து ஓரளவு வாக்கு சதவிகிதத்தை மட்டுமே பெற முடிந்ததை தவிர இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
அதே போல் ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி, பவன்கல்யாண் ஆகியோர்கள் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.
எனவே சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலம் அவ்வப்போது விழிப்புணர்ச்சியை மக்கள் பெற்று வரும் நிலையில் இனியும் ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பது நடக்காத காரியம் என்றே கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் விதிவிலக்கா? என்பதை அவர் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கியவுடன் தான் தெரிய வரும்
இருப்பினும் தற்போது முன்னணியில் உள்ள மாஸ் நடிகர்களின் அரசியல் கனவு, கனவாகவே இருந்துவிட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது என்றே கருதப்படுகிறது