4 வருட தோல்வி அணியை ஜெயிக்க வைத்தார்களா? இந்திய அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டியின் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிப்பெறாத ஒரு அணியிடம் இப்படி படு தோல்வி அடைந்திருக்கிறீர்களே என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வரும் நிலையில் மற்றொரு முக்கிய தகவலையும் பகிர்ந்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற நிலையில் வெற்றிப்பெற்று தற்போது ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில் பார்படாஸ் பகுதியிலுள்ள கென்சிங்கடன் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் பேட்டிங் செய்த நிலையில் முதல் விக்கெட்டிற்கு மட்டும் 90 ரன்களை குவித்தனர். ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் படு சொதப்பலாக விளையாடியதால் இந்திய அணி 40.5 ஓவருக்கு 181 என்று எளிமையான இலக்கை நிர்ணயித்து இருந்தனர்.
இதனால் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவருக்கு 4 விக்கெட்டுகளுடன் 182 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றனர். அதிலும் அந்த அணி கேப்டன் ஷாய் ஹோப் 80 பந்துகளுக்கு 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல மற்றொரு வீரரான கீசி கார்டி 65 பந்துகளுக்கு 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வெ.இ அணியினர் 6 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக இந்திய வீரர்களை தோற்கடித்தனர்.
இந்தத் தோல்விக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வில் இருந்ததுதான் காரணம் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். அதேபோல பேட்டிங் ஆர்டரில் கொண்டு வந்த மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி கவனம் செலுத்தாமல் இருந்ததால்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று சில ரசிகர்கள் கூறிவரும் நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெறாத ஒரு அணியிடம் இப்படி தோல்வி அடிந்திருக்கிறீர்களே என்று சிலர் வருத்தம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னையில் கடந்த 2019 டிசம்பரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 9 போட்டிகளில் வெஸ்ட் இஸ்டீஸ் அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வந்திருக்கிறது. இதனால் 4 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக அந்த அணி வெற்றிக்கனியை சுவைத்து இருக்கின்றனர்.
மேலும் 2 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்திலும் அசத்தலாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி இருக்கின்றனர். மேலும் இந்த வெற்றிக்குறித்து பேசிய கேப்டன் ஷாய் ஹோப் அடுத்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப்பெற்று 2-1 என்ற நிலைக்கு முந்தும். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
4 வருடங்களாக தொடர் தோல்வியை சந்தித்துவந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக வெற்றிப்பெற்றிருக்கும் நிலையில் இந்திய அணி வீரர்களை சில ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் சோஷியல் மீடியாவில் இந்திய அணியை விமர்சித்து மீம்ஸ்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout