கொரோனா தாக்கம்- மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 நிர்ணயித்த கல்லூரி!!! ஆச்சர்யத் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் கல்வித்துறை அதிகளவு பாதிக்கப்பட்ட ஒரு துறையாக மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வெவ்வேறான அணுகுமுறைகளைப் பின்பற்றி 2020 ஆம் கல்வியாண்டினை முறைப்படுத்த தொடங்கியிருக்கின்றன. ஆன்லைன் வகுப்பு, விளையாட்டுடன் கூடிய கல்விப் பாடங்கள் என பல்வேறு முறைகளை கொண்டுவந்தாலும் அதிலும் தொடர்ந்து குறைபாடுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சேர்க்கைக் கட்டணத்தை ரூ. 1 என நிர்ணயித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் பல விதிமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தாலும் பொருளாதார நிலைமையில் கடுமையாக தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மேற்குவங்க மாநிலத்திலுள்ள நைஹாட்டி மாவட்டத்தின் ரிஷ பங்கிம் சந்திரா கல்லூரி என்ற கல்விக்குழுமம் தற்போது மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ.1 எனக் கட்டணத்தை நிர்ணயித்து இருக்கிறது.
வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த கல்லூரியின் அனைத்துப் பாடப் பிரிவுகளைவும் சேர்த்து 2400 இடங்கள் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ. 1 கட்டணம் எனவும் தொடர்ந்து நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ரூ.60 ரூபாய் கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அக்கலூரியின் முதல்வர் சஞ்சிப் மும்பை மிரர் பத்திரிக்கைக்குத் தெரிவித்து உள்ளார். இதுபோன்று இந்தியாவில் தற்போது சில நிறுவனங்கள் மாணவர்களின் நலனுக்காக கல்விக் கட்டணங்களை குறைக்க முன்வந்துள்ளன என்பதும் வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.