எபோலா வரிசையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புது வைரஸ் பாதிப்பு… பகீர் தகவல்!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் எபோலா வைரஸ் பற்றிய பீதி இன்றைக்கு வரையிலும் நீடிக்கிறது. இந்நிலையில் எபோலாவைத் தாண்டி கொரோனா வைரஸ் உலக மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.
எபோலா, கொரோனா வரிசையில் தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் “மார்பர்க்“ எனப்படும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக WHO தகவல் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த வைரஸ் 24-88% வரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது எனவும் WHO எச்சரித்துள்ளது.
கினியாவின் தெற்கு குக்கெடா மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மோசமான பாதிப்புகளுடன் உயிரிழந்த ஒருவரின் உடலை பரிசோதித்தபோது இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எபோலா, கொரோனாவை போன்று இந்த வைரஸ்ஸும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மேலும் இந்த நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பாதிப்பை எற்படுத்தும் தன்மைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அரண்டு இருக்கும் இந்தச் சமயத்தில் புதுப்புது வைரஸ் பாதிப்புகளும் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு நோய் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி WHO கேட்டுக்கொண்டுள்ளது.